அடிகளார் தொழும் ஆதிபராசக்தி!

0
495

 

சௌந்தரா கைலாசம்
மாலவனின் தங்கையென நீபிறந்து வந்து
மாதேவன் மனம்கவர்ந்து பாகமிடம் கொண்டாய்!
வேலவனை வளர்த்தெடுத்து மேதினியில் தீமை
வேரறவே வீழ்ந்துவிடப் பேருதவி செய்தாய்!
காலடியில் தலைவணங்கும் உயிர்களுக்கே அபய
கரம்காட்டி அருள்பொழியும் பிராமிஎனத் திகழ்வாய்!
மேல்மருவத் தூரிலுறை ஆதிபரா சக்தி!
மேன்மையெலாம் பெருகிவரத் துணைவருவாய் தாயே!

வெளியதனில் சுழலுகிற அண்டங்கள் எல்லாம்
விளையாட்டுப் போலஒரு விரலசைவில் படைத்தாய்!
ஒளிபரவத் தீயதுவும் உயிர்க்காற்றும் நீரும்
உயர்வானும் மண்ணதுவும் உன்விழைவில் செய்தாய்!
தெளிவருளி மானுடரின் சிந்தையுளே நின்று
தெவிட்டாத பேரின்ப நல்லுணர்வு தருவாய்!
எளியவரும் ஏற்றமுறும் மேல்மருவத் தூரில்
இருந்தருளும் ஆதிபரா சக்திகழல் போற்றி!

யானைகளின் படைத்தலைவி ஸம்பத்கரி, ஓங்கும்
அஸ்வங்களின் படைத்தலைவி அஸ்வாருட தேவி,
சேனைகளின் தலைவியெனத் திகழ்கின்ற வராஹி
திறமைமிகு மந்திரியாய்ச் சிறந்திடு மாதங்கி,
நானிலம் துயர்வுடைஇத் நால்வருமே அன்னை
லலிதையுனக் கமைந்திருக்குமத் நான்குகரம் போல்வார்!
ஞானமெனும் அக்கினியின் குண்டமதில் தோன்றி
நாளுமருள் செய்திடுவாய் ஆதிபரா சக்தி!

ஆத்தியுடன் முட்கிளுவை முல்லை, மா வில்வம்
ஆகியவை கொண்டுநிதம் அர்ச்சிக்கப் பெறுவாய்!
பூத்தஎழில் தாமரையும் முல்லை மாம்பூவும்
பொற்புடை நீலோத்பலமும் அசோக மலரும்
காத்தருளும் கரந்தனிலே காணமெனக் கொள்வாய்!
கனிவுடனே எட்டுவகைச் சித்திகளைத் தருவாய்!
தோத்திரங்கள் செய்துபெரும் சித்தரெலாம் கூடித்
தொழுதிடுசித் தேஸ்வரியே ஆதிபரா சக்தி!

யாகமதைவிரும்பிடுவாய்! தீவினையின் குவியல்
அத்தனையும் பொசுக்கிடுவாய்! கருணைமிகு கடலே!
தேகமதால், இயற்கையினால், தேவதை களாலே
சேர்கின்ற துன்பமெலாம் தீர்த்தருளும் தேவி!
ஆகமென ஸ்ரீவித்தை அட்சரங்கள் பத்தோ(டு)
ஐந்ததனைக் கொண்டவளே ஒப்பரிய தாயே!
போகமுடன் வீடுதரும் ஸ்ரீவித்தை அதற்குப்
போற்றுமதி தேவதையே ஆதிபரா சக்தி!

தந்திரங்கள் அறுபத்து நான்கினுமே லான
தந்திரமாய் அமைந்திருக்கும் ஸ்ரீ வித்தை அதனின்
மந்திரஸ்வ ரூபிணியே! ஸ்ரீசக்ர ராஜ்ய
மகிமைமிகு யந்திரத்தில் நிலைத்திருக்கும் தாயே!
சிந்தையொன்றி மூன்றுமுறை மந்திரம் ‘‘ஹ்ரிம்” அதனை
சீருடனே ஓதுவதை நீவிரும்பி நிற்பாய்!
சுந்தரம்சேர் ஸ்ரீசக்ர முக்கோணத் துள்ளே
சுடருமொளி மயமான ஆதிபரா சக்தி!

தேசுடைய தெய்வதத்தைத் தெரிவித்து நிற்கும்
திகழ்வுடைய பீஜ்மது ‘‘ஹ்ரிம்” என்ப தாகும்!
பேசுகின்ற நான்மறையின் சாரம் ஹ்ரிம் கார
பீஜமதைப் பீடமெனக் கொண்டிலங்கு கின்றாய்!
மாசறவே ‘‘ஹ்ரிம்” என்ற மந்திரத்தை ஓதி
வணங்குபவர் தமைக்கண்டு மகிழச்சி மிகக் கொள்வாய்!
பூசனைக ளுக்குரிய பிரணவத்தின் பொருளாய்ப்
புவியிதனில் விளங்குகின்ற ஆதிபரா சக்தி!

விலைபோட்டு வாங்கிடவே முடியாத நிறைவும்
வேண்டுகின்ற மனமகிழ்வும் தந்திடு ஹ்ரிம்காரி!
தொலையாது கர்மவினை மண்ணுலகில் மீண்டும்
துயர்ப்பிறவி எடுப்பதனைப் போக்கிடு(ம்) ஓம்காரி!
அலைசூழும் உலகில்லது பிறவியெடுத் தாலும்
அன்னையுனை மறவாத வரமருளும் காளி!
மலைபோலும் அன்புடைய பங்காரு அடிகள்
வழியாக நலமருளும் ஆதிபரா சக்தி!

உன்னுடைய நாமமெனும் பீஜமதை எங்கள்
உள்ளமெனும் பூமியிலே ஒழுங்குடனே நட்மோம்;
அன்புநிறை பக்தியெனும் நீரதனை வார்த்தோம்
அற்புதமாய் அதுசெழித்து வளர்ந்தோங்கக் கண்டோம்!
எந்நாளும் அதன்நிழலில் இருக்கின்ற எம்மை
எவரென்ன செய்துவிட முடியும்? இவ்வுலகில்
நன்மையெலாம் பெருகிவரும் மேல்மருவத் தூரின்
நாயகியாய் வீற்றிருக்கும் ஆதிபரா சக்தி!
எங்கேனும் உனைப்பணிவார்க் கிடரேதும் வந்தால்
எழுந்தோடி ஒருநொடியில் துயரதனைக் களைவாய்
சிங்கார விழிகளிலே கருணையது பொங்க
தேடிவரும் அடியவரை வாரியணைத் திடுவாய்!
மங்காத புகழோங்கும் மேல்மருவத் தூரில்
மனிதகுலம் உயர்வடைய நல்லவழி காட்டும்
பங்காரு அடிகள்தொழும் ஆதிபரா சக்தி!
பாடிஉனைப் பரவுகிறோம் வாழ்வருள்க தாயே!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 7 (1982)
பக்கம்: 8-9