அம்மா அவர்களின் தீபாவளி ஆசியுரை(2010)-பகுதி-2

0
421

இந்த நிலை மாற வேண்டும். மற்றவர்க்கு நாம் உதவ வேண்டும். அப்போது தான் நமக்கும் மற்றவர்கள் உதவுவார்கள் என்ற உண்மை நிலமையை உணர வேண்டும். பொய்யான நடைமுறைகள் போகவேண்டும். போலியான போக நிலை மாற வேண்டும். மெய்யான வாழ்வுமுறை வளரவேண்டும். மெஞ்ஞானம் உள்ளத்தில் நிறைய வேண்டும்.

இயற்கை வழிபாடு இந்த நிலைகளை எல்லாம் நம்மை உணரவைக்கும். விஞ்ஞானத்திலும் நன்மைகள் உள்ளன. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதுபோல விஞ்ஞானத்தையும் அளவோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சர்க்கரையின் இனிப்பில் மயங்கும் எறும்பு அந்த இனிப்பிலேயே கிடந்து மடிவது போன்ற வாழ்க்கை நிலை மனிதனுக்கு வரும்.

ஒரு காலத்தில் காட்டில் மிருகம் வாழ்ந்தது. அங்கேயே மனிதனும் வாழ்ந்தான். காட்டை
விட்டு மனிதன் கிராமம் வந்தான். வாழ்க்கையின் முறை மாறியது. பந்தமும் பாசமும் வளர்த்துக் கொண்டான். உறவு முறைகளைப் பெருக்கிக் கொண்டான். தன் வீடு, தன் குடும்பம், தன் பிள்ளை, தன் கிராமம் என்ற சுயசார்புச் சிந்தனைகளையும் கூடவே வளர்த்துக் கொண்டான்.

கிராமம் நகரமாகியது.

நகர் நகரமாகியது.

இப்போது நகரவாழ்க்கையும் நரகவாழ்க்கை போல் ஆகிக் கொண்டுள்ளது. இன்பமான இயற்கையான வாழ்க்கை முறை மாறி இயந்திரமான நடைமுறை வாழ்க்கை வழக்கமாகிவிட்டது. தன் வாழ்க்கை பற்றிய தன்முனைப்பே தன்னுள் நிறையப் பெற்றதால் மற்றவரிடம் காட்டும் மனித நேயம் மழுங்கிவிட்டது. அது மக்கிப் போவதற்குள் விழித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்குத் தான் செய்யும் உதவி என்பதே தனக்குத்தானே செய்து கொள்ளும் மாண்பு எனும் மனப்பக்குவம் வரவேண்டும்.

தெளிந்த நீரோடை போல் பிறரிடம் அன்பு காட்டிய மனங்களில் இன்று தீய எண்ணங்கள் புகுந்து விட்டன. பொது நலக் காரியங்களில் இன்று சுயநலம் கலந்ததால், அவற்றை அழிக்கத் தீவிரம் காட்ட தீவிரவாதிகள் உருவாகிவிட்டனா்.  காடுகள் அவர்களுக்கு மறைவிடமாயின. காட்டிலுள்ள மிருகங்கள் அவர்களுக்கு அங்கு இடம் விட்டு விட்டு நாட்டுக்குள் வருகின்றன. இப்படி மாறிய குடிபெயர்ப்பால் நாடு காடாகிறது. காடு நாடாகிறது.

ஒரு காலத்தில் திடீரென வந்த புயல், வெள்ளம் இப்போது சொல்லிவிட்டே வர ஆரம்பித்து விட்டன. கடல் உள்வாங்கி இயற்கையின் சீற்றநிலையை அறிவிக்கிறது. மனிதனுக்கு நியாயமான ஆசைகள் இருக்கலாம். ஆனால் ஆசையே போதையாக மாறக்கூடாது. போதையே ஆசையாக மாறிவிடக்கூடாது. அப்படி மாறிவிட்டால் இயற்கை பொறுக்காது. பூமியும் தாங்காது. அதன் விளைவுகள் சீற்றங்களாக வெளிவரும். இயற்கை சீற்றத்தை எந்த விஞ்ஞானமும் தடுத்து நிறுத்தாது.

இயற்கையை ஒட்டித்தான் விஞ்ஞானம்
போக வேண்டும். அப்போதுதான் இயல்பான வளர்ச்சி இன்பமான வாழ்க்கையைக் கொடுக்கும். தாயின் அன்பும், பாசமும், தந்தையின் ஆற்றலும் அனுபவமும் கொண்ட சொல்வாக்குக் கேட்டு நடந்தால் மனிதனின் செல்வாக்கும் நல்வாக்காகவே பல்கிப் பெருகும். “

அருள்வாக்குக் கேட்டு நடந்த அந்தக் காலம் அருட்காலமாக இருந்தது. மக்களிடம் அருள்நோக்கம் பின்சென்று பொருள்நோக்கம் முன் வந்ததால் மனித நேயம் மிகுந்த மகத்தான காலம் மறையத் தொடங்கிவிட்டது. பொருள்நேயம் எனும் மாய வலையில் மனம் மாட்டிக்கொண்டது. அருள் நோக்கம் போய் பொருள் நோக்கம் மட்டுமே வந்தால், ஆற்றலின் ஊக்கம் போய் அழிவின் தாக்கம் வந்துவிடும். ஆகவே உண்மையான உழைப்பையும், உறுதியான மன வலிமையையும், எதையும் எதிர்நோக்கும் செயல் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் மனிதன் முழுமையாக உணர மெஞ்ஞானம் வேண்டும். இயற்கையான உள்ள உணர்வுகளையும் உடல் உணர்வுகளையும் கூட, மெஞ்ஞானம்தான் ஒரு கரைக்குள் வைத்திருக்கும். கடல் கரையைத் தாண்டினால், எத்தகைய அழிவுகள் என்பதை சுனாமி காட்டிவிட்டதல்லவா…?மனித மனமும் தன் ஆசைகளை ஒரு கரைக்குள் அமைத்துக் கொள்ளாவிட்டால். அதுவே கட்டுப்பாட்டை மீறி அழிவுக்கு இழுத்துச் செல்லும் படகாகிவிடும். வாழ்க்கையே ஒரு நிலையில் பாரமாகிவிடும். மற்றவர்க்குப் பாடமாகிவிடும்.

ஒரு சின்னஞ்சிறு விதைதான் மரமாகிறது. அதிலிருந்துதான் காயும், பின் கனிகளும் கிடைக்கின்றன. அந்த மரம் பலருக்கும் பயன் தருகிறது. அந்த மரத்திற்கு நாம் எதுவும் கொடுக்கிறோமா? இல்லை. இயற்கையே எல்லாம் கொடுக்கிறது.காலங்களை வகைப்படுத்தி பருவத்தே பலன் கொடுத்து வந்த இயற்கையை மனிதர்கள்தான் மாசுபடுத்துகிறார்கள்.

மண்ணைத் தோண்டுவதும், நீரில் கழிவைச் சேர்ப்பதும், காற்றில் விஷத்தைக் கலப்பதும். தீ கொண்டு
தீமை செய்வதும், ஓசையின்றி ஆகாய ஓசோனை ஓட்டையாக்குவதும் மனிதர்களே…..!  இயற்கைக்குத் தொல்லை கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் தொல்லை தொடர்கதைதான். எனவேதான் தாய் போன்ற இயற்கையை வணங்கச் சொல்கிறோம். தீபவழிபாட்டால் இருள் நீங்குவதுபோல, இயற்கை வழிபாட்டால் மன இருள் நீங்கும். இன்னல்கள் நீங்கும்.அப்படி இன்னல்கள் நீங்க.

நம் உள்ளம் நல்ல உள்ளமாக வேண்டும்

நல்ல எண்ணங்கள் உதயமாக வேண்டும்

நல்ல செயல்கள் வண்ணம் பெற வேண்டும்

நல்ல உழைப்பு நாளும் பெருக வேண்டும்

உண்மையான உழைப்பும்.உண்மையான அன்பும், உண்மையான பாசமும், உண்மையான நேசமும், உண்மையான தர்மமும், உண்மையான மனித நேயமும்தான் இன்றைய உண்மையான தேவைகள். இவற்றை மனிதனின் உள்மனம் உணரும்போது உண்மை உயிர்ப்பு பெறும். ஊக்கம் பெறும்.

உயிர் காற்றோடு போனாலும்

உடல் மண்ணோடு போனாலும்

தர்மம் என்றும் நிலைத்திருக்கும்

புகழ் என்றும் பூத்திருக்கும்

மலர்ந்திருக்கும். மனம் பரப்பும்.

சிறிய விதை பெரிய கனிகளைக் கொடுப்பது போல, சிறிய தர்மங்களும் பெரிய பலன்களைத் தரும். பலன் பெருகப் பெருக, மனித வாழ்வும் வளம் பெறும்.

நல்லன பெருகும், நல்ல வழி பிறக்கும்.

நற்பணி பெருகும், நானிலம் சிறக்கும்.

அத்தகைய சிறப்புகளை இந்த நானிலம் பெற ஒவ்வொருவரும் தான். தன் வீடு, தன் குடும்பம் என்னும் குறுகிய வட்டத்தைத் தாண்டி, தங்கள் உண்மையான உழைப்பில் கிடைத்த ஊதியத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் புத்தாடை, இனிப்பு, பலகாரம் கொடுத்து அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியின் ஒளியைப் பார்க்க வேண்டும். அதற்கு இந்தத் தீபாவளி விழா ஒரு வாய்ப்பாக அமைய வாழ்த்துகிறோம்.

பக்தர்களுக்கும், செவ்வாடைத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அம்மாவின் ஆசி!

ஓம் சக்தி! ஆதிபராசக்தி!

நன்றி(சக்தி ஒளி நவம்பர் 2010-10ம் பக்கம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.