ஆதிபராசத்தி பிள்ளைத் தமிழ்

0
413

 

வாழ்வாங்கு வாழ்ந்திங்கு வாழ்வில் சரிந்தோரை
வாழ்விக்கும் சத்திய யம்மா!
வருவார் தமக்குநீ தருகின்ற மணியோசை
வல்வினைகள் தீர்க்கு தம்மா!
சூழ்வாங்கு சூழ்ந்துன்னைத் துதிப்போர்க்கு வறுமைநிலை
நூளாகப் போகு தம்மா!
துடித்தழுது வருவோரும் நொடிப்பொழுதில் துயர்தீர்ந்து
தூயநிலை பெற்று வாழ்வார்!
பாழ்நரகக் குழிவீழ்ந்து பதறித்து டிப்போர்க்குள்
பாதங்கள் துணைய தாகும்!
பக்குவத் தெரிந்துன்னைப் பற்றிடும் அடியாரைப்
பற்றிநீ காப்பா யம்மா!
கீழான சிற்றுயிரும் வாழவழி செய்மழலை
செங்கீரை யாடி யருளே!
சிறந்தோ ரிலங்குமேல் மருவூ ரமர்ந்தபெண்
செங்கீரை யாடி யருளே!

பிறப்பினால் மக்களெல் லாருமோர் நிறையெனினும்
பேதங்க ளுண்ட வர்க்குள்
பேணிடுந் தொழிலாலும் பெற்றிடுங் குணத்தாலும்
பெறற்கரிய பொருளி னாலும்
நிறந்தாலும் நெறியாலும் நிலைத்திடும் அறிவாலும்
நீங்காத மொழியி னாலும்
நிலத்தாலும் உணவாலும் நிலைகாட்டும் உடையாலும்
நினைக்கின்ற மனத்தி னாலும்
சிறப்பாலும் சேருமொரு நட்பாலும் அரசாலும்
சேர்குடிப் பிறப்பி னாலும்
சிறிதேனும் பேதங்கள் உண்டெனினும் சத்தியருள்
சித்திக்கும் உயிர்க ளெல்லாம்!
இறப்பினால் ஒன்றாகும் நிலைதந்த பெருஞ்சத்தி
சப்பாணி கொட்டி யருளே!
இனியோ ரிலங்குமேல் மருவூர் விளங்கொளியே!
சப்பாணி கொட்டி யருளே!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 6 (1982)
பக்கம்: 41