என்னை அடைய எளிய வழி

0
2029

தியானம் செய்வதும் , தவம் செய்வதும் ஒரு வகையான வழிதான்.ஆனால் தியானத்தால் மட்டும் என்னை அடைந்துவிட முடியும் என்று மனப்பால் குடிக்காதே !

தவம் செய்யத் தொடங்கித் தங்கள் உடம்பின் மேல் புற்று முளைக்கும் நிலையில் உள்ளவர்களும் , புற்று மண்டி அதன்மேல் மரம் முளைத்த நிலையில் உள்ளவர்களும் இன்றும் இருக்கிறார்கள் ! என்றாலும் என்ன? அவர்கள் என்னைக் காண முடிந்ததா ? இல்லை!

ஏன் தெரியுமா? அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டாலும் என்னை வந்து அடைய முடியாது.உன் முயற்சியால் மட்டும் என்னை அடைந்து விட முடியாது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.உன் முயற்சியைக் கண்டு இரக்கம் கொண்டு நான் உன்னிடத்தில் வரவேண்டுமே தவிர நீ என்னிடம் வருவது இயலாத காரியம்.இதனால் நீ முயற்சி செய்ய வேண்டாம் என்பது கருத்தில்லை.ஆனால் பிற உலகியல் விஷயங்களில் உன் முயற்சி எவ்வளவு பெரிதாக இருப்பினும் என் அருள் இருந்தாலொழிய அந்த முயற்சி எவ்விதப் பயனையும் அளிக்காது.ஜெபம், தவம் என்ற இரண்டும் இல்லாமலே என் அருளைப் பெற முடியும் என்பதையும் நீ அறிய வேண்டும்.

முழுவதுமாக என்னையே சரணம் அடைந்து விடு ! அதன் பிறகு நானாக உனக்கு என்ன பணி இடுகிறேனோ, அதனை ஏன் ? என்ன? எதற்கு? என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் முழுமனதோடு செய்ய முற்படு.அப்பொழுது என்னை எளிதாக அடைய முடியும்.அது எப்பொழுது தெரியுமா? நானே உன்னிடம் வந்து ஒரு பணியைச் செய்யுமாறு ஏவுகிறேன்.அந்தப் பணி சிறியதாகவோ, பெரியதாகவோ, கடினமானதாகவோ எளிமையானாதாகவோ இருக்கலாம்.ஆனால் ஒன்றை மறந்து விடாதே!

நான் இட்ட பணியை உடனே நீ செய்து முடித்தால் என்னைப் பற்றிக் கொள்ள முடியும்.நானே உன்னிடம் வந்துதான் அந்தப் பணியை உனக்கு இடுகிறேன்.நீ வரவேண்டும் என்ற உன் விருப்பத்திற்கு இணங்காத நான் இப்பொழுது நானாகவே உன்னிடம் வருகிறேன் அல்லவா! இதைவிட அரிய வாய்ப்பு உன் வாழ்க்கையில் வேறு எபொழுது கிடைக்கப்போகிறது?

தொண்டு செய்வதன்மமூலம் நீ என்னை எளிதாகப் பற்றி கொள்ள முடியும்.எந்தப் பணியை நான் இட்டாலும் அதில் உயர்வு , தாழ்வு என்று கருதாமல் லாப நஷ்டக் கணக்குப் போடாமல் செய்து முடிப்பதே என்னை அடையும் வழியாகும்.

தவம் மேற்கொண்டு புற்றாகவும் , மரமாகவும் நிற்கின்றவர்கள் என்னை இன்னும் காணவில்லை.ஆனால் , என் பணியைத் தலைமேற்கொண்டு செய்யும் உன் எதிரில் நிற்கிறேன்.இந்த எளிய வழியை நீ விட்டுவிடாதே!

ஓம்சக்தி.
(மருவத்தூர் மகான் அவதாரத் திருநாள் சிறப்பு மலர்)
மாலை மலர்
பக்கம் :1