ஓம் ஊனை உருக்கும் உயர்வே போற்றி ஓம் !

0
887

பொன்னை உருக்கினால், அழகிய நகையாகும் !
வெண்ணெயை உருக்கினால் , மணம் மிக்க நெய்யாகும் !
மேகம் உருகினால், மழையாகப் பொழியும் !
உள்ளங்கள் உருகினால், தெய்வங்கள் வசமாகும் !

” உள்ளம் உருகுதையா – முருகா
உன்னடி காண்கி கையிலே ”

_ என்று, இறைமை ஒரும் இன்பத்தை அனுபவித்துப் பாடுவார்கள்.

இறைவன் திருவருள் என்ற இன்பத்தைச் சுவைத்தவர்கள், உருகிப் போகிறார்கள், அவர்கள் மனமும் உருகுகிறது; உடலும் உருகிப் போகிறது.

“அன்புருகி நெஞ்சுருகி அழுதே பணிவார்க்குக்
கல் மனமும் கரைந்துருகக் காட்சி தரும் காரிகையே ”

என்ற பாடல் வரிகள் பொய்யல்ல ! அம்மா பக்தர்கள், குறிப்பாகப் பெண்கள் இதனை அதிகம் உணர்வார்கள். ட எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்த இங்கு நினைவு கூரலாம் :

நம் ஆன்மிக இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஒருவர், ஒரு பெண் மணியைக் கடுமையாகத் திட்டி விட்டார். அந்தப் பெண்மணி, அம்மா படத்தின் முன் நின்று ஓ… என்று கதறி அழுதிருக்கிறார். சில நாட்களுக்குப் பின் அந்தப் பெண்மணி பாத பூஜைக்குப் போய் இருக்கிறார்.

அவரைப் பார்த்து, “என்ன நீ! என் படத்தின் முன்னால் நின்று, அப்படி அழுகிறாய் ? இங்கே என் உடம்பு எரிகிறது!இனிமேல் அழாதே ! என்ன ? அந்த மாவட்டத் தலைவனை நான் பார்த்துக் கொள்கிறேன் ! சரி, சரி. நீ போய் வா”. – என்று அம்மா சொன்னார்களாம்.

வெளியில் வந்ததும், “ஐயோ ! நான் என் வீட்டுப் பூஜை அறையில் அழுதது, அம்மாவுக்குத் தெரிகிறதே……, நான் அழுத அழுகையால், அம்மா உடம்பு எரிகிறதாமே ?” என்று நினைத்து, மேலும் அழுது தீர்த்தாராம் அந்தப் பெண்மணி.

இப்படி எத்தனேயோ சம்பவங்கள் உண்டு.

இறைமை இன்பம் என்பது அறிந்து கொள்வது அல்ல : அனுபவிப்பது ! ஒதுவது அல்ல; உணர்வது !

இறைமை இன்பத்தை எய்துவது எளிது ! ஆனால் எய்த முயல்வது, அரிது என்பர். அதனை எய்த முயல்வதற்கும், அவள் அருள் வேண்டும்.

மாணிக்கவாசகர் பாடுகிறார்:

“வான நாடரும் அறியொ ணாத நீ
மறையின் ஈறும் முன் தொடரொ ணாத நீ
ஏனை நாடரும் தெரியொ ணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்ட வா !
ஊனை நாடகம் ஆடுவித்த வா
உருகி நான் உனைப் பருக வைத்த வா !
ஞான நாடகம் ஆடுவித்த வா!
நைய வையகத்து உடைய இச்சையே!

(இறைவனே! வானவரும் (தேவர்கள் ), வேதங்களும், அதன் முடிவும் உன்னை அணுக முடிவதில்லை. ஏனையோரும் தெரிந்து கொள்ள முடியாதவன் நீ! ஆனால் அடியேனுக்காக எளிதில் வந்து, என்னை ஆட்கொண்டாய்!

என் உடம்பினுள்ளே ஒளித்திருந்து, உணர்த்தி, என்னை ஆனந்தக் கூத்தாடச் செய்தவனே! என் உள்ளத்தை உருக்கி, உன் அருளைப் பருகும் படிக் செய்தவனே! இந்த ஞான நாடகத்தால், எனக்குள்ள உலகம் பற்றை நைய(மறை ய) வைத்தாயே!) – என்கிறார்.

மாணிக்கவாசகர் பெற்ற அந்த இறை இன்பம், நமது அம்மா பக்தர்களுக்கும் பொருந்தும் தானே…!

“ஊனையும், உயிரையும், மனத்தையும் உருக்குகின்ற அந்த இறை இன்பத்தைத் தரும், உயர்ந்த பொருளாக அன்னை ஆதிபராசக்தி விளங்குகிறாள்” என இம் மந்திரம் கூறுகிறது.

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 253 + 254