ஓம் சத்தியே அம்மா!

0
328

கண்கண்ட அற்புதமே! களிகொண்ட பரம்பொருளே!
பண்கொண்டு மூத்தவளே! பராசத்தி பானவளே!
எண்கொண்டு உனைப்பணிந்தார்க் கெந்நாளும் துணையவளே!
மண்கொண்ட புகழவனே! மருவத்தூர்த் தவத்தவளே!

விண்கொண்ட புகழ்வளே! வினைதீர்க்க வந்தவளே!
கண்கொண்ட கனிவினளே! கரையில்லாக் கருளையளே!
மண்கண்ட உலகினிலே மறவியினை மாய்ப்பவளே!
உண்ணெகிழும் பக்திக்கே உருக்காட்டும் தூயவளே!

எண்ணத்தைக் கரும்பாக்கி இதயத்தில் அமர்பவளே!
கண்ணொளியை மேற்பாய்ச்சிக் கருதாத சிந்தனையை
என்னுள்ளே வைப்பவளே! இமயத்தின் மூத்தவளே!
முன்னுள்ள தீவினையின் முடிச்சவிழ்த்துப் பார்ப்பவளே!

விண்ணுக்கும் மேல்வீட்டில் வித்தையெலாம் கற்றவளே!
மண்ணுக்குள் விளையாட மருவத்தூர் வந்தவளே!
புண்ணுக்கே மருந்தான புவனத்தின் தாயவளே!
என்னுக்குள் நீநின்றே உன்பதிப்பை உருவாக்கே!

கருத்தும் பிழையாமல் கவிதையினில் உருவாவாய்!
வருத்தும் நோய்தணிக்க வாதுமையின் பகுப்பாவாய்!
உறுத்தும் மனச்சுமையை ஓர்நொடியில் இறக்கி வைப்பாய்!
பெருத்த புகழ்வாழ்வைப் பிரித்துவிட்டும் நீபார்ப்பாய்!

‘‘குருத்து”ம் விளங்க வைக்கக் கோயிலிலே அருள்செய்வாய்!
‘‘கருத்து”ம் பிழைத்தவரைக் கடைநோக்கில் காத்துநிற்பாய்!
‘‘விருத்தப் புலமை” எலாம் வேண்டியவர் கொள்ள வைப்பாய்!
எருத்துச் சுமைஈசன் என்றைக்கும் உனைப்பணிவான்!

அடுத்த பிறவிபற்றி அவரவர்க்கும் ஓதிவைப்பாய்!
‘‘கெடுத்த குடி”வந்தால் கேள்வியினால் வாயடைப்பாய்!
உடுக்கத் துணியாவாய்! உன்போர்க்கும் உணவாவாய்!
படுக்கப் பாயாவாய்! பராசக்தி காத்திடுவாய்!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 6 (1982)
பக்கம்: 8