ஓம் சந்தனச் சாந்தாணி உகப் பாய் போற்றி ஓம் !

0
420

541. ஓம் சந்தனச் சாந்தாணி உகப் பாய் போற்றி ஓம் !

அன்னை தன் திருமேனியில், சந்தனச் சாந்து பூசுவதை விரும்புகிறவள் என்பது கருத்து .

542. ஓம் சிந்தனைக் கரிய திருவே போற்றி ஓம் !

ஆதிபராசக்தி பேரறிவு படைத்த பரம்பொருள் . வாக்குக்கும், மனத்துக்கும் எட்டாத நிர்க்குணப் பிரம்மம். உருவமற்ற நிலையில் அவள் நிர்க்குணப்பிரம்மம் !

ஒரு பெயரும், வடிவமும் கொண்டு ஒரு படி இறங்கி வரும் போது சகுணப்பிரம்மம் !

ராஜராஜேஸ்வரி, லலிதா, திரிபுரசுந்தரி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அன்னபூரணி, வாலை என்ற பெயர்களும், வடிவமும் தாங்கித் தன் பக்தர்களுக்காக இறங்கி வந்து, அருள்பாலிக்கிற போது அவள் சகுணப் பிரம்மம்!

நிர்க்குண நிலையில் அவள் இருக்கும் போது, சிந்தனைக்கு எட்டாதவள்; சிந்தித்துப் பார்க்கவும் இயலாது.

குணங்களொடு கூடிய சகுணப்பிரம்மம் நிலையில், ஒரளவு நம் சிந்தனைக்கு எட்டுபவள்.

சித்தனைக் கரிய திருவே !- என்னும் இம் மந்திரம், அவள் நிர்க்குணப் பிரம்மமாக இருக்கிற நிலையைப் போற்றுகிறது.

நிர்க் குணமாக இருக்கும் பரம்பொருள் பற்றிப் பின்வருமாறு உபநிடதங்கள் கூறுகின்றன;

“அக்கினி அவனது தலை ; சந்திர சூரியர் அவனுடைய கண்கள்; திசைகளே அவனது காதுகள்;அண்டம் அவனது இதயம் ; வாயு தான் அவன் மூச்சு (பிராணன்); பூமி அவனது பாதங்களில் தோன்றியது ”

– ( முண்டக உபநிடதம் 2:1:4)

” எள்ளிலே எண்ணெய் போல, பாலிலே நெய்போல, ஆற்றுப்படுகையிலே ஊற்று நீர் போல, விறகிலே தீயைப் போல உயிர்களிலே இறைவன் உறைகின்றான்”
– சுவேதாஸ்வதர உபநிடதம்.

“எங்ஙனம் சிலந்திப் பூச்சி தன் உடலில் இருந்து நூலை வெளிப்படுத்தி வலையைப் பின்னுகிறதோ, மீண்டும் அதை எவ்வாறு தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, எங்ஙனம் செடிகள் பூமியிலிருந்து முளைக்கின்றனவோ, எங்ஙனம் மனித உடம்பிலிருந்து உரோமங்கள் உண்டாகின்றமை வா, அங்ஙனமே அண்டங்கள் அனைத்தும், பிரம்மத்திலிருந்து உதிக்கின்றன”
_ முண்டக உபநிடதம்.

“இறைவன் தனது இச்சையால், எத்தனையோ உருவங்களாகத் தோற்றம் எடுக்கின்றான். உருவம் உள்ள பொருள்களும் அவனே ! உருவமற்ற பொருள்களும் அவனே ! பருப்பொருள்களும் அவனே ! நுண்பொருள்களும் அவனே !அறிவுள்ள பொருளும் அவனே ! எனவே தான், இறைவனை மெய்ப்பொருள் என்று அழைக்கின்றனர்.
– தைத் திரிய உபநிடதம் –

“தேவர்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள், அற்பமான உயிரினங்கள், பெரியதும் சிறியதுமாக வாழ்வன, முட்டையிலிருந்து பிறப்பவை, கருப்பையிலிருந்து வெளிவருபவை, வியர்வையில் தோன்றுபவை, மண்ணிலிருந்து முறைப்பவை, குதிரைகள், யானைகள், பசுக்கள், பறவைகள், மனிதர்கள், ஊர்வன, நடப்பன-இவை அனைத்து மாக இருப்பது பிரம்மம் !
-ஐத்ரேய உபநிடதம்.

“வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம், ஆதாரமான ஒரே பொருள் பிரம்மம் என்பதையும், அதுவே மெய்ப்பொருள் என்பதையும், உள்ளத்தூய்மையால் ஆராய்ந்து உணர வேண்டும்; அவ்வாறு உணராதவன் பிறப்பு – இறப்புச் சுழலில் இருந்து தப்பிக்க மாட்டான்.
– கடோம் நிடதம் .

“சூரியனின் ஆன்மாவாக அமைத்து, எது ஒளி வீசுகிறதோ, அதுவே தான் மனிதனின் உள்ளத்திலேயும் உறைந்து ஒளி வீசுகிறது, ”
– தைத் திரிய உபநிடதம்.

“நெருப்புக்கு நிலைத்த உருவம் இல்லை; ஆனால் எந்தப் பொருளைப் பற்றிக் கொண்டு எரிகின்றதோ, அந்தப் பொருளின் உருவமாகத் தோன்றுகிறது. அது போல, ஒன்றேயான பிரம்மம், தன் விளங்கும் பொருள்களுக்கு ஏற்ப ப் பலவாகத் தோன்றுகிறது.”
-கடோபநிடதம்.

“பிரம்மம் பூரணம் ஆனது.; பூரணத்திலிருந்து பூரணம் உதயமாகி உள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின் பூரணமாகவே உள்ளது.”
– பிருகதாரண்ய உபநிடதம்.

“பிரம்மம் (இறைமை) ஒற்றை மரம் போல நின்று , உலகனைத்தும் நிறைந்துள்ளது.”
-சுவேதா ஸ்தர உபநிடதம்

“இறைமை பெரியது, பிரகாசமானது; ஒளிர்வது; நுண்ணியதிலும் நுண்ணியது !”
– முண்டக உபநிடதம்.

“வேதங்களை ஒதுவதாலோ, விரிந்த கல்வியாலோ, விளங்கும் அறிவாலோ, பிரம்மத்தை ஒருவன் உணர்வதில்லை; அதன் அருளைப் பெற்றவர்கள் தாம், பிரம்மத்தை உணர்கின்றனர்,
– கடோபநிடதம்.

“சொற்பொழிவுகளிலோ , மேதாவிலாசத்தாலோ, கல்வியறிவாலோ பரமாத்மாவை எய்த இயலாது. இதயத்தின் ஏக்கத்தால் மட்டுமே, இறைவனை எய்த முடியும்.”
– முண்டக உபநிடதம்.

“அசிந்த்யரூபம்” -சிந்திக்க முடியாத உருவத்தை உடையது பிரம்மம் !
– முண்டக உபநிடதம் .

“சிந்தனைக் கரிய சிவம்” – என்று பாடினார் மாணிக்கவாசகர் .அதனையே, ” சிந்தனைக்கரிய சக்தி !” என்று இம் மந்திரம் அன்னை ஆதிபராசக்தியைப் போற்றுகிறது.

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 285 + 286 + 287 + 288 + 289 +2 90