ஓம் பெரிதினும் பெரிதாய்ப் பிறங்கினை போற்றி ஓம் !

0
913

ஓம் சிறிதினும் சிறிதாய்ச் சுருங்கினை போற்றி ஓம் !

இறைவன் எங்கும் வியாபித்து இருக்கிறான். அவன் ஆயிரம் கோடி அண்டங்களாகவும் வியாபித்து இருக்கிறான்.மண்ணிலிருந்து முளைக்கும் ஒரு சிறிய புல்லிலும் வியாபித்து இருக்கிறான்.

இறைவன் எவ்வளவு பெரியவன் என்பதை, அவனது வியாபகத் தன்மையை – விசுவரூபத்தை, நமது அனுபூதி மான்கள் விளக்குகிறார்கள்.

“அக்கினி அவனது தலை ; சூரிய சந்திரர்கள் அவனுடைய கண்கள்; திசைகளே அவனது காதுகள்;அண்டம் அவனது இதயம் ; வாயு தான் அவன் (மூச்சு) பிராணன்; பூமி அவன் பாதங்களில் தோன்றியது ” என்கிறது முண்டக உபநிடதம் . ( 2 : 1 : 4)

அர்ச்சுனனுக்கு, பகவான் கிருஷ்ணன் தன் விசுவரூபத்தைக் காட்டுகிறான் ! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீண்டு, உயர்ந்து நிற்கும் அந்த உருவத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறான் அர்ச்சுனன் !
அப்போது பகவான் சொல்கிறான்:

” என்னுடைய இந்த அற்புத வடிவத்தை வேதங்களாலும், தவம் செய்வதாலும், தானதருமங்கள் செய்வதாலும். வேள்விகள் பல செய்வதாலும் கண்டு விட முடியாது. வேறு இடம் செல்லாத பக்தியால் மட்டுமே, இவ்விதம் அறிய முடியும் ! உள்ளபடி என்னைக் காண முடியும்; என்னுள் புக முடியும் !” ( கீதை – 11.53.54)

மேற்கண்ட உண்மையை வைத்தே, “பெரிதினும் பெரிதாய்ப் பிறங்கினை போற்றி ஓம் ” என்ற மந்திரம் துதிக்கிறது. (பிறங்கினை – விளங்கினை என்று பொருள்)

அண்டம் முழுதும் வியாபித்துள்ள அந்தப் பரம்பொருள், பிண்டமான நம் மனித இதயத்துள்ளே, அணு வடிவில் ஜோதியாக – ஆன்மாவாக உள்ளது. அது மட்டுமா….? சின்னஞ் சிறிய ஒரு சிற்றெறும்புக்குள்ளும் ஒர் ஆன்மாவாக வியாபித்துள்ளது.

அது கருதியே, “சிறிதினும் சிறிதாய்ச் சுருங்கினை போற்றி ஓம் ” என இம் மந்திரம் போற்றுகிறது.

” அணுவிற்கு அணுவாகவும், பெரிதிற்குப் பெரிதாகவும் உள்ள அவன், ஆத்மாவாக, இந்த ஜீவனுடைய இதயக் குகையில் மறைந்து உறைகிறான்.”

“ஆசை நீங்கியவன், இந்த ஆன்மாவைக் காண்கிறான். அப்போது சோகமற்றவனாய், அந்தக் கரணங்களின் தெளிவாய், இந்தப் பெருமை வாய்ந்த இறைவனைக் காண்கிறான்.”
என்கிறது சுவேதா ல்வதர உபநிடதம்.

617. ஓம் அரிதினும் அரிதாய் அமைந்தனை போற்றி ஓம் !

மனிதர்கட்குத் தன் அறிவின் மீது அயராத நம்பிக்கை உள்ளது. எனவே, அறிவின் துணை கொண்டு, இறைவனே அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறான்.

அறிவினால் அவனை அறிய முடியாது என்பதை, மனிதன் அறிவதில்லை என்கிறார் திருமூலர் .

“அறிவு அறிவு என்று அரற்றும் உலகம்
அறிவு அறியாமையாரும் அறியார்” . _ (23. 62)

இறைவன் அறிந்து கொள்ள முடியாத வன் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் மாணிக்கவாசகர் .

“தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன்” – திருவாசகம் (26.3).

பரஞ்சோதியாக உள்ள பரமன், தெறிவதற்கு அரியவன் ! அவனை ” தெரிய அரிய பரஞ்சோதி ” என்பர்.

யாவராலும் அறிய முடியாதவன் இறைவன்.” அறிதல் யார்க்கும் அரியான் ” என்பது நம்மாழ்வார் வாக்கு.

” அறிவிற்கு அப்பாற்பட்டது பிரம்மம் என்பதை அறிந்து கொள்வது தான், பிரம்மத்தை அறிந்து கொள்வதாகும்” என்கிறது உபநிடதம்.

மேற்கண்ட கருத்துக்கள் பரம்பொருளான ஆதிபராசக்திக்கும் பொருந்தும்.

618. ஓம் தெரிவி னும் தெரியாத் தெளி பொருள் போற்றி ஓம் !

“விவரிக்க முடியாத அற்புதமான சக்தி ஒன்று, எல்லாவற்றிலும் பரவி நிற்பதை, நான் உணருகிறேன். அது நமது ஐம்பொறிகட்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளது. எனவே, அதனுடைய இருப்பை, நிரூபிக்க முடியவில்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதைக் , காரண காரிய நிலையில் நிரூபிக்கலாம்.” – என்றார் காந்தியடிகள் .

உண்மைப் பொருளான இறைமை உண்டு என்பது தெளிவு. ஆனால், அது எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்வது தான் அரிது. எனவே தான் இறைவனைத் .”தெரிவரிதாகிய தெளிவே ” என்கிறார் மாணிக்கவாசகர் .

“பிரம்மத்தை நான் முழுவதுமாகத் தெரிந்து கொண்டேன் என்று கூற முடியாது; பிரம்மத்தைப் பற்றி நான் எதுவும் தெரிந்து கொள்ளவில்லை என்றும் கூற முடியாது” – என்று கேன உபநிடதம் இயற்றிய ரிஷி சொல்கிறார்.

இவ்வாறு, தெரிந்தும் தெரியாத தாய், அறிந்தும் அறிய முடியாத தாய், கண்டும் காணாத தாய் உள்ளது இறைமை !

எனவே தான் பிரம்மத்தைப் பற்றி, தெரிந்து கொள்ளவில்லை என்றும் கூற முடியாது; தெரிந்து கொண்டோம் என்றும் கூற முடியாது – என்கிறது கேன உபநிடதம்.

இந்த உபநிடத உண்மையினன, “தெரிவு அரிதாகிய தெளிவு” என ஒரே வாக்கியத்தில் கூறி விடுகிறார் மாணிக்கவாசகர் .

பிரம்மமான ஆதிபராசக்திக்கும் பொருந்தும் உண்மை இது !

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 331 + 332 +333