ஓம் மண்ணினில் திண்மை வைத்தாய் போற்றி ஓம் !

0
522

மண்ணினில், திண்மை அதாவது கடினத் தன்மையை உண்டாக்கியிருக்கிறாள் அன்னை.

இயற்கை என்று நம் கண் முன்னால் காண்பான எல்லாம், உயிரற்ற ஜடப்பொருளாகத்தான் தெரிகிறது. ஆனால் அந்தப் பொருளில், பரம்பொருளின் அம்சமாக ஒரு தெய்வம் இருப்பதாக யக்ஞ வல்கியர் குறிப்பிடுகிறார்.

இத்தகைய தெய்வங்களை “அதிஷ்டமான தேவதைகள் ” என்பர். உதாரணமாக கங்கையில் கங்காதேவி, யமுனையில் யமுனா தேவி, இமய மலையில் இமவான் என்ற தேவதை, கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகிற இடத்தில் திரிவேணி தேவி என்ற தேவதை ஆகியோர் இருக்கின்றனர்

பகவான் இராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர் விஞ்ஞானந்தர். அவர் திரிவேணி தேவியின் தரினைத்தைப் பெற்றவர்.

“சக்தி எந்த ரூபம், தருமம் எந்த ரூபம் என்பதெல்லாம், உங்கட்குத் தெரியாது” என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி. இதிலிருந்து, ஒவ்வொறு பொருளின் சக்திக்கும், ரூபம் உண்டு என்று தெரிகிறது.

கர்ணன் அம்பு பட்டு இரத்தம் வழிய இருந்தபோதும், அவனது உயிர் போகவில்லை; தரும தேவதை அவனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது, கண்ணனது ஞானக் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது!

பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி இருப்பதால், அதற்கு “அந்தர்யாமி ” என்ற ஒரு பெயர் உண்டு.

ஒவ்வொரு பொருளுக்கும் உண்டான அதிஷ்டான தேவதை மூலம், அந்தர்யாமியாக இருந்து, ஆதிபராசக்தி பிரபஞ்சத்தை இயக்கி வருகிறாள் என்று தெரிகிறது – அதிஷ்டான தேவதைகளுள், மேலும் சில வருமாறு:

பூமிக்கு அதிஷ்டான தேவதை பூமாதேவி ; நீருக்கு வருணன்; நெருப்புக்கு அக்கினி தேவன்; காற்றுக்கு வாயு பகவான், ஆகாயத்துக்கு இந்திரன்; சூரியன் – சூரியதேவன்; திசை கட்கு திக் பாலகர்கள்.

இயற்கை சீராக இயங்க அதிஷ்டான தேவதைகள் இருப்பது போல, தனி மனிதனை இயக்கவும் அதிஷ்டான தேவதைகள் உண்டு.

ஆன்மாவுக்கு – பரமாத்மா

மூக்கிற்கு – அஸ்வினி குமாரர்கள்

வாக்கிற்கு – அக்கினி தேவன்

கண் புலனுக்கு – சூரியதேவன்

செவிப்புலனுக்கு _ திக் தேவதைகள்

மனத்துக்கு – சந்திர தேவன்

தொடு உணர்ச்சிக்கு _ வாயுதேவன்

– மேற்கண்டவைகள் இயங்குவது போல் தோன்றினாலும், உண்மையில் அவற்றின் பின்னால் நின்று இயக்குபவர் அந்தர்யாமியாகிய இறைவனே -என்கிறார் ரிஷி யக்ஞ வல்கியர். (பிருக தாரண்ய உபநிடதம்)

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 261 + 262