ஓம் மறுப்பன செய்யினும் வாழ்த்துவம் போற்றி ஓம் !

0
1087

தங்களது நெருங்கிய சொந்தங்கள் மரணமடைந்து விட்டால், அது வரை கோயிலுக்குச் சென்று சிரத்தையோடு வழிபட்டவர்கள், “இந்தச் சாமி காப்பாற்றவில்லை; இனி நான், இந்தக் கோயிலுக்கு போக மாட்டேன்; அந்தச் சாமியையும் கும்பிட மாட்டேன்” என்று ஒதுங்கிக் கொள்வார்கள் .
அதுவரை வழிபட்டு வந்த தெய்வப் படங்களைத் தூக்கிப் பரண் மேலே போட்டு விடுவார்கள். மனிதர்களில் இப்படி ஒரு ரகம் உண்டு !

கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் சாமி ! கேட்டதைக் கொலைக்க வில்லை என்றால் , இந்தச் சாமிக்குச் சக்தி இல்லை ? கோயிலுக்குப் போவார்கள். இப்படி ஒரு ரகம் உண்டு !

தங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் நிறைவேற்றினால் தான், அது சாமி ! அதற்குத்தான் சக்தி ! என்று நினைப்பவர்கள் உண்டு.

“இது சக்தி உள்ள சாமி ! என்று எல்லோரும் சொல்கிறார்கள்; நம் கோரிக்கையை இது நிறைவேற்றுகிறதா என்று பார்க்கலாம் என்று, இந்தக் கோயிலுக்கு வருகிறேன்” என்று அரைகுறை நம்பிக்கையோடு வருபவர்கள் ஒரு ரகம்.

“தனது மனக்குறையைத் தீரக்க வில்லை என்றால், தன் விதியை நொந்து கொள்ள வேண்டுமே தவிர, தெய்வத்தை நொந்து கொள்ளக் கூடாது, அந்த தெய்வத்தை நிந்திக்கக் கூடாது; அது பாவம் ! என்று இறை அனுபவம் பெற்ற பெரியோர்கள் சொல்கிறார்கள்.

நமது ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஒருவர், ஒரு விழாவில் சொற்பொழிவு ஆற்றினார். அப்பொழுது,

“நீங்கள் எல்லோரும் மருவத்தூர் வாருங்கள், நீங்கள் கேட்டதை எல்லாம் அம்மா தருவாள்; உங்கள் கோரிக்கைகள் எல்லாவற்றையும் அவள் நிறைவேற்றுவாள். அம்மா, மஹாசக்தி ! உங்களுக்கு வேண்டியதெல்லாம், அம்மா அள்ளி அள்ளிக் கொடுப்பாள் !” என்று கூறினார். சில நாட்கள் கழித்து, அன்னையிடம் அருள்வாக்குக் கேட்கச் சென்று, அன்னையின் எதிரில் அமர்ந்தார்.

“வாடா மகனே ! வா ! நீ என்ன ? எல்லோருடைய நாக்கிலும் தேன் தடவிக் கூப்பிடுகிறாய் ?

கேட்டதையெல்லாம் அள்ளித்தருவாள் என்று, கூட்டத்தில் பேசுகிறாயே …..! தேன் தடவி அனுப்புகிறாயே ….. ! அது எப்படியடா முடியும் ?” – என்று கேட்டாள்.

“நான் அப்படிச் சொன்னது தவறா அம்மா ? கேட்டதை எல்லாம், எல்லோருக்கும் கொடுக்க முடியாதா …?” என்றார் அவர்.

“ஒரு பக்தன் என்ற முறையில், நீ சொல்லியது சரி ! ஆனால் மகனே ! எல்லோருக்கும், எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்து விட முடியாதடா ! அவனவன் பாவ, புண்ணியக் கணக்கு என்று ஒன்று இருக்கிறதா !” என்றாள் அன்னை.

இங்கே, ஆதிபராசக்திக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தொண்டு செய்யும் கூட்டமும் உண்டு; ஆதிபராசக்தியை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டமும் உண்டு.

தொண்டு, தியானம், தருமம் இவற்றைக் கருத்தாகச் செய்யும் கூட்டமும் உண்டு; சிண்டு முடிந்து பதவி, பொறுப்புகளைக் கைப்பற்றி, ஆதிக்கம் செய்ய வேண்டும் என்று கருதி , அரசியல் பண்ணுகிற ஒரு சில கோஷ்டிகளும் உண்டு ?

தங்கள் சுயநலம் கருதித் , தொண்டு செய்பவர்களும் உண்டு, சுயநலக் கலப்பில்லாமல் , ஆன்ம முன்னேற்றம் கருதித் , தொண்டு செய்பவர்களும் உண்டு”

“நீங்கள் எல்லாம், மனுஷ ஜென்மங்கள் ! இப்படித்தான் இருப்பீர்கள் !” என்று சொல்லி, இந்த அடிமட்டத்தின் ஈனத்தனங்களைச் சகித்துக் கொள்கிறாள் அன்னை.

இங்கே “மிட்டா, மிராசுகளுக்கு மட்டும் ” என்றில்லை, பஞ்சைப் பராரிகளுக்கும் அருள் உண்டு ! போலிகட்கு மட்டுமே அருள் இல்லை – என்று சொல்லிக் காட்டுகிறாள்.

இன்றைய மக்கள் பாவ மூட்டைகளோடு, பல எதிர்பார்ப்புகளோடு வருகிறார்கள்.

சில எதிர்பார்ப்புகளை உடனே நிறைவேற்றித் தருகிறாள்; சிலவற்றை நிறைவேற்றாமல், காலம் கடத்துகிறாள்.

அவள், நமது கோரிக்கைகளை நிறைவேற்றினாலும் சரி; மறுத்தாலும் சரி; ” இனி நீயே எனக்குக் கதி ! நீ பரம்பொருள் ! எனக்கு எது நல்லது என்று உனக்குத் தெரியும்; உன்னை வழிபடுவதும், உனக்குத் தொண்டு செய்வது மே, எனக்குப் போதும் ” என்று கருதிக் கொண்டு வாழ்வது தான், உயர்ந்த பக்தி !


“நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளன எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே ! அருட்கடலே ! இமவான் பெற்ற கோமள மே !”

– என்று பாடுகிறார் அபிராமி பட்டர்.

“தாயே ! எங்கள் குறை தீர்க்க நீ மறுத்தாலும், எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தாலும், உனக்கே பணி செய்வோம் ! உன்னையே வாழ்த்தி, வாழ்நாளைக்கழிப்போம்” என்று சரணாகதியைத் தெரிவிக்கிற மந்திரம் இது !

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் -245 + 246 + 247