கட்டுக்குளம் சுவாமியார்

0
451

சுவாமியார் அளித்த அமிழ்து :

1926ல் நான் முதல் முதலில் கட்டுக்குளம் சுவாமியாரைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கட்டுக்குளம் சுவாமியாருக்கு மாயாண்டி சுவாமியார் என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் குயவர் வகுப்பைச் சேர்ந்தவர். ஓர் ஒற்றை மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்தார்: ஓர் இடத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மேல் தங்குவதில்லை. முக்கியமாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இவர் வண்டியில் போய்கொண்டிருந்தார்.

சுவாமிகள் வண்டியில் மண்ணால் செய்த ஒரு வண்ணால் சால் வைத்திருந்தார். வண்டி ஓர் ஊருக்குள் அல்லது நகரத்திற்குள் சென்றதும் மக்கள் சாதம், சமைத்த காய்கறி, சாம்பார், ரசம், பருப்பு, மோர், தயிர் உறித்த வாழைப்பழம் (மாமிச பண்டங்கள் நீங்கலாக) முதலிய உணவுப் பொருள்களை அந்தச்சாலில்; போடுவார்கள். (அவரவர்கள் வீட்டில் இருக்கும் உணவுப் பண்டங்களைப் போடுவது வழக்கம்) சால் நிறைந்ததும் அந்தக் கதம்பத்தைக் கிளரிச் சுற்றி இருக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் உருண்டை கொடுப்பர். அவரும் இரண்டு உருண்டை சாப்பிடுவர். பிறகு சாலில் தண்ணீர்க் கொட்டி அதைக் கலக்கி மக்களுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்துத் தாமும் அதைக் குடிப்பர்.

1926ம் ஆண்டு கோடை வீடு முறைக்கு நான் சென்னையிலிருந்து மதுரைக்குப் போனேன். மதுரையில் என் தகப்பனார் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். அப்போது சுவாமியார் பிரபல புத்தக வியாபாரியான E. M. கோபாலகிருஷ்ணகோன் வீட்டுத்தோட்டத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்றேன். சுமார் 100 நபர்கள் ஆடவரும், மகளிரும் சுவாமியாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் வழக்கம் போல் சாலில் உணவுப் பண்டங்களைக் கையால் கலந்து அதை விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

அவர் செய்வது எனக்கு இருவறுப்பாய் இருந்தபடியால் அவர் கொடுக்கும் உருண்டையை வாங்காமல் நான் ஒதுங்கி நின்று கொண்டிருந்தேன். என்னையாரும் கவனிக்கவில்லை. நான் அந்நகரின் நீதிபதியின் புதல்வன் என்பதும் யார்க்கும் தெரியாது. ஆனால் நான் மட்டும் உணவு உருண்டையை வாங்கவில்லை. என்பதைச் சுவாமியார் கவனித்து என்னை அருகில் அழைத்தார். தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அவர்களை சுத்தமாக கழுவினார். பிறகு ஒரு வாழை இலையில், வாழைப்பழம், திருகினதேங்காய், நாட்டுச்சக்கரை ஆகியவைகளைக் கலந்து வைத்துக் கொண்டு என்னைப்பார்த்து சொன்னார். ‘’தம்பி நான் மற்றவர்களுக்குக் கொடுத்த உணவு உருண்டை உனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால் சுத்தமாக உனக்ணகுப் பஞ்சாமிருதம் செய்திருக்கிறேன்; இதைச்சாப்பிடு. என்னிடம் வந்தயாரும் பிரசாதம் வாங்காமல் போகக் கூடாது, என்றார். நான் மகிழ்ச்சியுடன் பஞ்சாமிருதத்தைச் சாப்பிட்டேன். நான் விடைபெற்றுப் போவதற்கு முன் சுவாமியார் என்னைப் பார்த்துச் சொன்னார்.

சொன்னதும் நடந்ததும்:

‘‘நீ பெரியவனானதும் உனக்கு ஓய்வே இருக்காது. நீ ‘‘சுந்தர் அனுபூதி” ‘சுந்தர் அலங்காரம்” என்னும் இரண்டு நூல்களையும் நாள் தோறும் படித்து வந்தால் போதும் என்றார் அதற்கு நான் பதில் உரைத்தேன். சுவாமி, நான் என் தகப்பனாரைப் போல் கஷ்டப்பட்டு வேலை செய்யமாட்டேன். எனக்கு எப்போதுமே போதிய ஓய்வு இருக்கும் என்றேன். அதற்கு சுவாமியார் பதில் சொன்னார் போகப்போக உனக்கு உணவு சாப்பிடக் கூட அவகாச மில்லாமல் கஷ்டப்படுவாய் என்றார்.

சுவாமியார் சொன்னபடி ‘’கந்தர் அனுபூதியை” மனப்பாடம் செய்து இன்று வரை துதித்து வருகிறேன். நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தேன். அப்போது பல அரசாங்க வேலைகளைப் பொறுப்பேற்று நடத்த வேண்டி வந்தது. உறங்குவதற்கும், காலா காலத்தில் உணவு அருந்துவதற்கும் அவகாசமில்லாமல் கஷ்டப்பட்டேடன். அப்போது 1926ல் சுவாமிகள் சொன்ன வார்த்தைகள் அடிக்கடி என் நினைவுக்கு வரும்.

தெய்வீக ஆற்றல் :

1926க்குப் பிறகும் சுவாமிகளைப் பற்றியும் அவர் சம்பந்தப்பட்ட சல நிகழ்ச்சிகளைப் பற்றியும் கேள்விப்பட்டேன். அவருக்குச் சில நோயாளிகளைக் குணப்படுத்தும் தெய்வீக ஆற்றல் இருந்தது. நோயாளிகளுக்கு ‘’ஓம் நமச்சிவாய” என்று சொல்லி விபூதி கொடுத்தாலே நோய் குணமடைந்துவிடும்.

சாதாரணமாக ‘’மலேரியா” சுலத்திற்கு ருனைன் கொடுத்தால் சுலம் நீங்க சில நாள்கள் பிடிக்கும். ஆனால் சுவாமியார் விபூதி கொடுத்தால் நோயாளி உடனே சுரம் நீங்கி எழுந்துவிடுவான். ஆனால் சில சமயங்களில் சுவாமியார் விபூதி கொடுக்க மறுத்து விடுவார். அந்தச் சமயங்களில் நோயாளி தேறுயதில்லை.

எங்கள் வீட்டில் நிகழ்ந்தது :

என்னுடைய மூத்த தமயனார் வாசுதேவனுக்கு விடாமல் சுரம் அடித்துக் கொண்டிருந்தது. ஆறுமாதமாகியும் டாக்டர்களால் இன்ன சுரம் என்று கண்டு பிடிக்கவில்லை. என் தகப்பனார் சுவாமியாரை வீட்டுக்கு அழைத்;து வந்து என் தமயனாரைக் காண்பித்தார்.

சுவாமியார் நோயாளியைப் பார்த்தவுடன் விபூதி கொடுக்காமல் ‘’நான் ஒரு குயவன் எனக்கு என்ன தெரியும்” என்று சொன்னார். விடாமல் என் தகப்பனார் வற்புறுத்த ‘’பிரயோஜனமில்லை” என்று சொல்லி விபூதி கொடுத்தார். சில நாள்களுக்குப் பின் என் தமையனார் காலமாய் விட்டார்.

நான் அறிந்த நிகழ்ச்சி :

மற்றொரு சம்பவம் நான் ஒரு டாக்டரிடம் இருந்து கேள்விப்பட்டேன். அந்த டாக்டர் சுவாமியாரிடம் போனாராம். டாக்டரைப் பார்த்ததும் சுவாமியார் சொன்னார், உன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் சுரமாயிருக்கிறார்கள், அதற்காக நீ என்னிடம் வந்திருக்கிறாய், உன்னுடைய இரு பிள்ளைகளில் ஒருவன் மாண்டுவிட்டான். நீ திரும்பிப் போவதற்குள் அவனுக்குத் தகனம் கிரிகைகள் முடிந்து விடும். உன் மற்றொரு பிள்ளை சுரம் நீங்கி சௌக்கியமாக இருக்கிறான் என்று கூறினாராம். இதைக் கேட்ட டாக்டருக்கு ஒரு பக்கம் துக்கம், ஒரு பக்கம் கோபம். ‘என் ஒரு பிள்ளை மாண்டிருந்தாலும், நான் திரும்பும் வரை சவத்தை பத்துக்கள் வைத்திருப்பார்கள்.

நானில்லாமல் சவத்தைத் தகனம் செய்யமாட்டார்கள். நீங்கள் சொல்வது வெறும் பிதற்றல் என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு உடனே காரில் ஏறி வீடு நோக்கிச் சென்றார். நாற்பது மையல் கடக்க வேண்டியிருந்தது. அவர் வீட்டுக்குப் போவதனால் கடு காட்டைத் தாண்டித்தான் போக வேண்டும். கடுகாட்டை அடைத்ததும் தன் உறவினர்கள் சலை ஓரம் நிற்பதைக் கண்டார். மாண்ட தன் மகன் தகனக்கிரிகைகள் முடிந்து விட்டது. உன்று கேள்விப்பட்ட அவர், ‘’ஏன் நான் வரும் வரையில் சவத்தை வைத்திருக்கவில்லலை” என வினாவினார். பெரிய அம்மையால் மாண்ட தன் மகன் சவத்தை உடனே தகனம் செய்ய வேண்டு மென்று நகர அதிகாரிகள் உத்தரவிட்;டார்கள் என்பதை அவர் அறிந்தார். அதன் பிறகு வீட்டிற்குச் சென்றார். மற்றொரு மகன் ஓடிவந்து தகப்பனாரைக் கட்டிக்கொண்டான். டாக்டர் பின் சுவாமியாரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்பது உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியாகும்.

சுவாமியின் சித்துகள் :

சில சமயங்களில் சுவாமியார் மாட்டு வண்டியை விட்டுவிட்டு நாள் கணக்கில் அன்ன அகாரமின்றிக் காட்டில் தவம் செய்து வருவார். வேறு சில சமயங்களில் சில பேருக்கு அவர்கள் எதிர்காலத்தைப் பற்றச் சொல்லுவார். அதன்படி நடக்கும். சிலருக்குச் சித்தின் மூலம், லட்டு, ஜாங்கிரி முதலிய இனிய தின்பாண்டங்களம், மலர்களும் வரவழைத்துக் கொடுப்பார். மாணவர்கள் அவரை அணுகித் தேர்வுக்குப் போவதற்கு முன் அவரிடம் விபூதி வாங்கிப் போவார்கள். அவர் கொடுத்த விபூதியை இட்டுக் கொண்டு போனால் தேர்வில் வெற்றி பெறுவார்கள். ஒரு சமயம் ஒரு மாணவன் அவரை அணுகி விபூதி கேட்டான் அவர் கொடுக்கவில்லை.

அவன் விடாமல் வற்புறுத்தவே விபூதி கொடுத்தார். அவன் சென்றதும் சுவாமியார் அந்த மாணவன் தேர்வில் தேர்ச்சி பெறமாட்டான். என்று பக்கத்தில் ஈருந்தவர்களிடம் சொன்னார். அதே பிரகாரம் மாணவன் தேர்வில் வெற்றி பெறவில்லை. கொடுத்த விபூதியை ஒரு காகிதத்தில் மடித்துச் சட்டைப் பையில் வைத்திருந்தான். அவன் வீட்டில் அவன் அன்னை அந்தச் சட்டையை (விபூதியுடன்) சலவைக்குப் போட்டு விட்டாள். மாணவனும் விபூதியைப் பற்றி மறந்துவிட்டான். தேர்வுக்குப் போவதற்கு முன் தான் ஞாபகம் வந்தது.

வருவது உணர்ந்த ஞானி :

அவர் மறைவதற்கு ஒரு வருடத்திறகு முன்னரே அவர் எந்த இடத்தில் எந்தக்காலத்தில் சமாதி அடைவார் என்று சொல்லியிருந்தார். அவர் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். மக்களுடன் பேசிக்கொண்டேயிருந்த சுவாமிகள் குறிப்பிட்ட நிமிடத்தில் எல்லோரையும் கை கூப்பி வயங்கி ‘’ஓம் நமசிவாய” என்று சொல்லிக் கொண்டே சமாதி அடைந்தார்.

இந்தச்சித்தரின் வாழ்க்கையிலிருந்து முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில் அவர் எல்லா மதத்தாரையும் சமமாக நடாத்தினார். ஒருவருக்கும் (பிராணிகள் உள்பட) தீற்கு செய்யக் கூடாது என்று சொல்லி வந்தார். அவரைப் பற்றிக் குறை கூறியவர்களையும் அவர் அன்போடு நடத்தினார். பாரத தேசமாகிய இந்தப் புண்ணிய பூமியில் தோன்றிய அனேக சித்தர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

ஓம் சக்தி
நன்றி: சக்தி ஒளி
விளக்கு :2 சுடர் :2
பக்கம் : 4-7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.