சித்திரை பெளர்ணமி வேள்வியின் பகுதி ஒன்று

0
259

யார் தருவார்

ஆன்மிகத்தில் பிறரைச் சார்ந்திருந்த நமக்கெல்லாம் ஆன்மிக குருவாக அருள்திரு அம்மா நமக்கு அமைந்தது நம்முடைய பாக்கியம். துவக்க காலத்தில் சில செங்கற்களை அடுக்கி யாக குண்டம் எனவும்,  மண் கலசத்திலே மஞ்சள் நீர் ஊற்றிக் கலச தீர்த்தம் எனவும் கோடுகள், சதுரங்கள்,வட்டங்கள் சக்கரங்கள் எனவும் கற்பித்தார்கள்.

அவை எல்லாம் இன்று மகா பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. இவை பற்றியெல்லாம் ஆரம்பத்தில் ஒன்றுமே அறியாத பலரை வேள்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக உயர்த்தியது நம்முடைய பாக்கியத்திலும் பாக்கியம். சிறப்பிலும் சிறப்பு.

நூல்களில் சொல்லப்பட்ட யாகங்கள்

யாகங்களில் பலவகை உண்டு. அவை பிரம்ம யாகம், தெய்வ யாகம், பூதயாகம், பிதுர்யாகம், மனுஷ்ய யாகம் எனப்படும். இவற்றுள் வேதம் ஓதுதல் , பிரம்ம யாகம், ஓமம் வளர்த்தல் தெய்வயாகம், பலி ஈதல் பூத யாகம், தர்ப்பணம் செய்தல் பிதுர் யாகம் இரப்போர்க்களித்தல் மனுஷ்ய யாகம் எனப்படும். அக்னி காரியங்களாகச் செய்யப்படும் இந்த யாகங்களின் விரிவு முப்பது எனவும் அவற்றின் பெயர்களும் நூல்களில் கூறப்பட்டுள்ளன.

அக்கால யாகங்கள்

தனிப்பட்டவர்கள் தங்கள் சுயநலத்துக்காகச் செய்யப்பட்ட யாகங்களும் உண்டு. பேரரசர்களும் மாமன்னர்களும் தங்களின் வீரத்தையும், பெருமைகளையும் பறைசாற்றுவதற்காகவும் யாகங்களைச் செய்வவது உண்டு.

அசுவமேத
யாகம்

சக்ரவர்த்தி என்று பட்டம் சூட்டிக் கொண்டவன் தன் பட்டத்துக் குதிரையை அலங்கரித்து அதில் யாரும் ஏறிக்கொள்ளாமல் வீரர்கள் புடைசுழ அதைப் பல நாடுகளுக்கு அனுப்புவான். அக்குதிரையை எந்த நாட்டு அரசன் பிடித்துக் கட்டிப்போடுகிறானோ அவனுடன் சக்ரவர்த்தி போரிட்டு வென்று தன் மேலாண்மையை நிலைநாட்டுவான்.குதிரையைக் கட்டிப்போடாது மரியாதை செய்து அனுப்பும் அரசன் சக்ரவர்த்தியின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டதாக ஆகும்.

பட்டத்துக் குதிரை பல நாடுகளைக் கடந்து தடையின்றி சக்ரவர்த்தி ஆட்சி செய்யும் இடத்துக்கு வந்ததும் சக்கரவர்த்தியால் செய்யப்படும் யாகத்துக்கு அசுவமேதயாகம் என்று பெயர்.

இராமர் அனுப்பிய அசுவத்தை லவகுசர்கள் பிடித்துக் கட்டிப் போட்டு இராமருடன் போருக்கு நின்றார்கள் என்பது இராமாயணத்தின் மூலம் அறிய முடிகிறது.

இராசசூய யாகம்

பேரரசர்கள் தங்கள் பெருமையையும் நாட்டின் செல்வ வளத்தையும் பறைசாற்றுவதற்காகச் செய்யப்பட்ட யாகம் இராஜசூய யாகம் எனப்பட்டது. இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ அரசன் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறான்.

பகைவரை அழிக்க பலம் பெற வேள்வி

எதிரிகளை அழிப்பதற்காகவும் யாகங்கள் செய்யப்பட்டன.இலட்சுமணனை வெல்ல முடியாத இந்திரஜித், நிகும்பலை என்ற இடத்துக்குச் சென்று ஒரு யாகம் செய்தான். நிகும்பலை யாகத்தை இந்திரஜித் வெற்றிகரமாகச் செய்து விட்டான் என்றால் அவனை யாராலும் வெல்ல முடியாது என்ற உண்மையை வீபீஷணன் இராமனுக்குச் சொன்னான். அதனால் இந்திரஜித்தை நிகும்பலை யாகத்தைச் செய்யவிடாமல் தடுத்து, இலட்சுமணன் அவனுடன் போர் செய்து வென்றான்.

அபிசார வேள்வி

பாண்டவர்களைக் கொன்றழிப்பதற்காக அபிசார வேள்வி செய்யும் படி முனிவன் ஒருவனிடம் துரியோதனன் கேட்டுக் கொண்டான். அதன்படி முனிவனும் அபிசார வேள்வியைச் செய்தான். வேள்வி முடிவிலே யாக குண்டத்திலிருந்து பழங்கரமான பூதம் ஒன்று வெளிப்பட்டது. உடனே முனிவன் அந்த பூதத்திடம் பாண்டவர்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சொல்லி அவர்கள் அனைவரையும் அடித்துக் கொன்று தின்று வா என்று ஏவினான்.

துரியோதனன் கேட்டுக் கொண்டபடி முனிவன் செய்யும் அபிசார வேள்வியின் நோக்கத்தை ஞானத்தால் உணர்ந்தார் கண்ண பரமாத்மா.அதனால் அந்தப் பேராபத்திலிருந்து பாண்டவர்களைக் காத்தார் என்பது இதிகாச வரலாறு.

கண்ணபிரானின் அருளால் பாண்டவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் போகவே உக்கிரத்துடன் திரும்பிய பூதம் யாகசாலைக்கு வந்து தன்னைத் தவறான இடத்துக்கு அனுப்பிய முனிவனையே அடித்துக் கொன்றது. எதிரிகளை அழிக்க அபிசார வேள்வியும் அக்காலத்தில் செய்யப்பட்டது என்பது தெரிகிறது.

வாரிசு வேண்டி வேள்வி

வாரிசு இல்லாத மன்னர்கள் தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காகச் செய்யபட்டது புத்ர காமேஷ்டி யாகம். தசரத மன்னன் தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காகப் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான். அந்த யாக குண்டத்தில் தோன்றிய தேவன் கொடுத்த பாயசத்தைத் தசரதனின் பத்தினிகள் உண்டதால் தசரதனுக்கு வாரிசுகள் உண்டாயினர் என்பது இராமாயணக் கதை.

சுயநல வேள்வி

இக் காலத்தில் கூட சிலர் தங்கள் வாழ்நாளைப் பெருக்கிக் கொள்ள ஆயுள் ஓமம் என்ற வேள்வியையைச் செய்து கொள்கிறார்கள். தங்களின் செல்வ மேம்பாட்டிற்காகச் சில வேள்விகளைச் செய்து கொள்கிறார்கள்.

வலிமை பெற வேள்வி

யாகம் செய்தவர்களுக்கு யாகம் முடிந்தவுடன் உயரிய வலிமை கிடைத்திருக்கிறது. அதனால் தான் தங்களுக்கெதிராக முனிவர்களும் ரிஷிகளும், யாகத்தின் மூலம் வலிமை பெற்று விடக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் யாகங்களை அழிக்க அரக்கர்கள் அந்த யாகசாலையை அசுத்தப்படுத்தி அதன் புனிதத்தைக் கெடுத்தார்கள். இவ்வாறு பலமுறை தங்களின் யாகத்தைக் கெடுத்த தாடகை என்னும் அரக்கியை அழிப்பதற்காகத்தான் விசுவாமித்திர மாமுனிவர் தசரத மன்னனின் புதல்வர்களாகிய இராம இலட்சுமணர்களை வேண்டிப் பெற்றுத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

பொதுநல வேள்வி இல்லை

அக்காலத்தில் செய்யப்பட்ட யாகங்கள் அனைத்தும் தனிப்பட்டவர்களின் நலம் நாடி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டுச் செய்யப்பட்டன. அடுத்து மன்னர்களின் வீரத்தையும், பெருமைகளையும் பறை சாற்றுவதற்காகச் செய்யப்பட்டன. பொதுநல நோக்கிலே குடிமக்களின் நன்மைக்காக யாகம் செய்யப்படவில்லை என்பது தான் நாம் அறிந்தவற்றுள் தெரிந்து கொண்டதாக உள்ளது.

உலக நன்மைக்காக உயரிய வேள்வி

நம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் செய்துவரும் சித்ரா பெளர்ணமி வேள்வி உலக நன்மைக்காகச் செய்யப்பட்ட வேள்வியாகும். இயற்கைச் சீற்றங்களைக் குறைப்பதற்கும், அதன் விளைவுகளிலிருந்து மக்களைக் காப்பதற்கும் கருணை உள்ளங்கொண்டு அருள்திரு அம்மா அவர்களால் செய்யப்படும் வேள்வியாகும் இது.

தொடரும்……..

நன்றி

சக்தி ஒளி 2011 அக்டோபர்

பக்கம்41 -44.