தனிப்பெரும் ஆன்மிக குரு

0
236

“படித்த வேதங்களோ, புராண இதிகாசங்களோ, வளர்த்த திறமைகளோ கற்றறிந்த அறிவியல் அறிவோ சாகும் தருவாயில் இருக்கும் மனிதனுக்கு உதவுவதில்லை. கட்டிய மனைவிகூட அருகில் வர அஞ்சுவாள். உலகப் பற்றுக்கள் தற்காலிகமானவை; நிரந்தரமான ஒரே துணை இறைவன் மட்டுமே” என்று ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் பாடியிருக்கிறார்.

பாதுகாப்பற்ற இன்றைய உலகிலிருந்து மானுடத்தைக் காப்பாற்ற ஆன்மிகம் தேவை. வாழ்க்கைக்குப் பாதுகாப்பு ஆன்மிகமே, ஆன்மிகம் என்றாலே ஒவ்வோர் உயிரும் இறைவன் குடியிருக்கும் கோயில் என்பதை உணர்தலும், ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளுதலும் ஆகும். ஆன்மிகத்தில் ஈடுபடுவோருக்கு முக்கியமாகத் தேவைப்படும் பண்பு, பிறரை மதித்து, அவரது துன்பங்களைத் துடைக்கும் மனம்! இது பெரும் பூசை செய்வதற்குச் சமமானது. இதைத்தான் வள்ளுவரும்,

“அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தன்னோய் போல் போற்றாக் கடை” என்றார்.

மருவத்தூர் ஆன்மிக பூமியும் அடிகளாரும்:
————————————————-

ஆன்ம சக்தியில் இந்தியாவிற்கு நிகரான நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, ஆன்மிகம் வளர்த்த நாடு நம் நாடு. ஆன்மிகம் வளர்க்க பல இடங்கள் இந்நாட்டில் உண்டு. இவற்றில் அநேக இடங்களில் பொன்னும், பொருளுமே முக்கியமாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் அருளையும், ஆன்மாவையும் வளர்ப்பது மருவத்தூர் மட்டுமே. ‘ஆன்மிகம், கட்டுப்பாடு, ஒழுங்கு, அமைதி, பொறுப்பு, சமாதானம் இவற்றை மருவத்தூர் மண்ணிலிருந்துதான் பெற முடியும்’ என்பது அன்னையின் அருள்வாக்கு.

மனிதனின் அறிவு, ஆற்றல் இவற்றிற்கு மேம்பட்ட சக்தி உண்டு என்பது மருவூரில் நடைமுறையில் வைக்கப்படுகிறது.

மருவத்தூர் மண்ணிற்கே அடிகளாரால்தான் பெருமை. மருவூரைத் திருவூர் எனப் போற்றப்படுவதற்குக் காரணமே அவர்தான். அடிகளார் என்றாலே மக்களின் அன்பு, பாசத்திற்கு அடிமையானவர் என்று பொருள்.

அடிகளாரின் எளிமை போற்றுதலுக்குரியது. சிலருக்கு அவரது சக்தி புரிகிறது. சிலருக்கு அவர் அம்மாவாகவே தெரிகிறார். பசு சாதுவாக இருக்கிறது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இன்றைய ஆன்மிக உலகின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்பவர் அடிகளாரே.

உலகப்பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் அவர் மிகப்பெரிய ஆன்மிகத்தை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிற ஆன்மிககுரு ஆவார்.

அடிகளாரின் அருள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தது, ‘ஒரே தாய், ஒரே குலம்’ என்ற பண்டைத் தமிழன், திருமூலரின் குரல் மீண்டும் ஒலிக்கின்ற ஒரே இடம் மருவத்தூர். உலக மக்கள் எல்லோரும் ஒரே இனம் என்ற உணர்வை கோடிக்கணக்கான உள்ளங்களில் ஆழ விதைத்தவர் அடிகளாரே.

தனியாக அவர் ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஆன்மிக இயக்கத்தின் மூலம் அவர் இதுவரை சாதித்த, சாதிக்கின்ற, சாதிக்கப்போகும் திட்டங்கள் எண்ணிலடங்காதவை. எல்லாமே மக்களின் துணைக்கொண்டு, மக்கள், அம்மா அடைகளாரின் மேல் வைத்திருக்கின்ற அன்பினால் சாதிக்கப்பட்டவை.

அவர் எண்ணங்கள் உயர்வானவை, மனித நேயமிக்கவை. சமுதாய நோக்கம் கொண்டவை. அவர் எந்த பக்தனையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. தனக்கு நிகராகவே நினைத்துப் பேசுகிறார்.

‘இது உன் கோயில் உன் அம்மா, தைப்பூசத்திற்கு வா, சித்திராபௌர்ணமி பூசையில் கலந்துகொள்’ என்று உறவினரை வருத்தி அழைப்பதைப்போல் அழைக்கிறார். எந்த ஒரு சாதனையையும் தன்னுடையதாக மட்டும் எண்ணாது, கூட்டு முயற்சி என்று கருதி, அதில் ஒவ்வொரு பக்தனின் பங்களிப்பையும் பாராட்டிப் பேசும் குரு அவர் மட்டுமே.

மருவூர் ஆன்மிகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை. சாதிமத பேதமில்லை. இங்கு வந்து வழிபடுவோரில் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் உண்டு.

மத நல்லிணக்கத்திற்கோர் எடுத்துக்காட்டாய் விளங்கும் ஆன்மிக குரு அடிகளார் அவர்களே!

உலக மக்கள் அனைவரின் உடலிலும் ஓடும் ரத்தத்தின் நிறம் சிவப்பு என்பதாற்காகவும், உழைப்பின் அடையாளம் சிவப்பு என்பதற்காகவும், சொல், செயல், மனம் இவை செம்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் செவ்வாடையைத் தன் பக்தர்களின் சீருடையாக்கி இருக்கிறார் ஆன்மிக குரு அடிகளார்.