தியான அனுபவம்

0
293

*ஆன்மிகம் பற்றிய உரையாடல்*
***********************************
எங்கள் குடும்ப நண்பர் ஒருவரோடு அடிக்கடி ஆன்மிகம், தியானம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அவர் தியானம் பற்றிச் சொல்வதை அக்கறையோடு கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் அன்னை ஆதிபராசக்தியின் பக்தர். தவறாமல் சக்திஒளி புத்தகம் வாங்கிப் படிப்பவர்.

*தற்செயலாகப் படித்த சக்திஒளி*
*********************************

தற்செயலாக சக்திஒளி மாத இதழை (13/03/87) வாங்கிப் படித்தபொழுது அதில் தியானம் பற்றிக் கூறப்பெற்ற ஒருசில கருத்துக்களைப் படித்தேன். அதனைப் படித்ததன் பயனாக எனக்கே ஒரு எண்ணம் வந்தது. நாமும் ஏன் தியானத்தில் அமரக்கூடாது? அமர்ந்தால்தான் என்ன? என்று மனதில் பல கேள்விகள்!

இறுதியாக தியானத்தில் அமர்வது என முடிவு செய்து 20/03/87 அன்று பகல் 12 மணிக்குத் தியானத்தில் அமர்ந்தேன்.2 மணிக்குத் தியானத்தை முடித்துக் கொண்டேன் இப்படி ஒரு வருடம் நான்கு மாதம் பொறுமையைக் கடைபிடித்துத் தீவிர முயற்சியோடு தியானம் பழகி வந்தேன்.

29/07/88 அன்றுதான் நான் தியானத்தின் மகிமையை அறிந்தேன். அன்றைய தியானத்தின் போது ஓர் அற்புதக் காட்சி! இளம் சிவப்பாடை அணிந்து தலையிலே தங்க கிரீடம் தாங்கி, முகத்திலே புன்னகை தவழ – சாந்தமாக – அமைதியாக அன்னை ஆதிபராசக்தியின் திருக்கோலத்தைக் கண்டேன். அன்னைக்கு எத்தனையோ கோலம் ! அவற்றுள் இது ஒன்று போலும்! அழகோ அழகு! அந்த அழகை வர்ணிக்கும் தகுதி எனக்கில்லை! அதனை வர்ணிக்கவும் அச்சமாக இருக்கிறது. அந்தக் காட்சி வாழ்க்கையிலே மறக்க முடியாத காட்சி!

*அன்னை கேட்டது:*
*********************

நான் அன்னையை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அன்னை என்னை நோக்கிச் சிரித்து விட்டு,
*மகனே! உன் தீவிர தியானத்திற்கு என் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டு. உனக்கு என்ன வேண்டுமோ தைரியமாகக் கேள்! நீ என்ன கேட்க விரும்புகிறாய் அதையும் தயங்காமல் கேள்!* என்றாள்.

அதுகேட்ட நான் தாயே! இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களும், ஜீவராசிகளும் நலமுடன் இருக்க வேண்டும். அனைத்து மனிதர்களும் சகோதர பாசத்துடனும், அன்புடனும், பண்புடனும் பழக வேண்டும் தாயே! எல்லோரும் உன் நினைவாகவே இருக்க வேண்டும் தாயே! இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் கேட்க வேண்டும் என்றேன்.

*கேள் மகனே!* என்றாள் அன்னை.

*கேள்விகள்:*
***************
1.தாயே! மனிதர்கள் உன் மீது அளவு கடந்த அன்பு வைக்கும் போது , அந்த அன்புக்கு நீ கொடுக்கும் பரிசு என்ன?

2.தாயே! உண்மையான அன்புக்கு சிறந்த உதாரணம் சொல் தாயே!

*அன்னையின் பதில்*
************************

*மகனே! நீ கேட்ட முதல் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமானால், இப்போதுள்ள உன் மானிடப்பிறவி முடிய வேண்டும். அப்போதுதான் நீ என்மீது அளவு கடந்த அன்பு கொண்டவர்களுக்கு நான் என்ன பரிசு கொடுக்கிறேன் என்பதை நீ நேரிலேயே காண முடியும்.*

*உன் அடுத்த கேள்விக்கு பதில் சொல்கிறேன் கவனமாகக் கேள் மகனே!*

*அன்பு பெருகி நம்மைச் சூழ்ந்து கொள்ளும்போது தெளிவான ஒளி கிடைக்கும்.அந்த ஒளியில் மீண்டும் உலகக் காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு மாறுதல் ஏற்படும். இதுவரை குறைகளால் மறைக்கப்பட்டிருந்த உண்மையான அழகெல்லாம் உனக்கு ஜொலிக்கத் தொடங்கும்.இதுதான் அன்பின் மந்திர சக்தி! இதுதான் அன்பினால் விளையும் அற்புதம்.*

*உங்கள் உள்ளங்களில் அன்பு இசைபாடும் பொழுது வாழ்க்கைப் பூங்கா எழிலுடன் புன்னகை செய்யும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சுவையாகவும் அமையும்.*

*என் கருணையின் துணையாலும், என் மகன் மீது கொள்கிற ஆன்மிக அன்பினாலும் வாழ்க்கை என்றுமே நலமாக இருக்கக் கூடிய தன்மையை நீ புரிந்து கொள்ள முடியும். அன்பின் உண்மையான அர்த்தத்தை அப்போது மட்டுமே உணர முடியும் மகனே!*

*மீண்டும் உன் தியானம் தொடரட்டும்! உன் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆசி உண்டு!* எனச் சொல்லி மறைந்தாள் அன்னை.

யார்யாருக்கோ எப்படியெப்படியெல்லாமோ தியானத்தில் அனுபவங்கள் கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள்.

எனக்கு இப்படி ஒரு அனுபவம். இந்த அனுபவத்தை நான் பெறுவதற்குத் தூண்டியது *சக்திஒளி*

தியானத்தின் அருமையை உணராதவர்கள் இதனைப் படித்த பிறகாவது உணரட்டும் என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். .

*ஓரே தாய்! ஒரே குலம்!*
*எம்மதமும் சம்மதம்!*

சக்திஒளி
அக்டோபர் 1988.