தைரியமாக இரு! நானிருக்கிறேன்

0
414

அமெரிக்காவிற்கு M.S. படிக்கச் செல்ல எல்லா முன்னேற்பாடுகளும் முடிந்து 27/7/12 அன்றைக்கான விமான டிக்கெட் எடுத்துவிட்டேன். 4/7/12 இரத்த பரிசோதனை செய்தபோது வந்த ரிசல்ட் எனக்கு பெரும் உயிர்க்கண்டமாக அமைந்தது. மருத்துவர்கள் எனக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளது எனவும், இது அறிகுறி ஏதுமில்லாத மிகவும் ஆபத்தான வகை என்றனர்.

நானும் ,என் பெற்றோரும் துடிதுடித்துப் போய்விட்டோம்.மேல்படிப்பும்,அமெரிக்க வாசமும் வெறுங்கனவானாலும் உயிருக்கே உத்திரவாதமில்லை என்ற நிலையில் உடனே மருவத்தூர் ஓடி வந்து அம்மாவிடம் பாதபூஜையில் அழுது, தொழுது முறையிட்டோம்.

அந்தக் கருணை தெய்வம் எங்களைத் தேற்றி *தைரியமாக இருங்கள்!* *நான் காப்பாற்றிக் கொடுப்பேன்!* எனச் சொன்ன பின்புதான் எங்களால் சுயமாக செயல்பட முடிந்தது. *மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடு! கூடவே நான் சொல்கிற மருந்தையும் எடுத்துக் கொள்!* என அம்மா சொன்னார்கள்.

ஜூலை 28 ஆம் தேதி மிகத் தீவிரம் வாய்ந்த மருந்துகள் கொடுக்க ஆரம்பித்ததும் சோதனையும் ஆரம்பித்தது. மருந்து வேலையைக் காட்ட ஆரம்பித்தது. பக்க விளைவுகள் தாங்க முடியாத துயரைத் தந்துவிட்டன. தலைமுடி உதிர்ந்து, முகத்திலுள்ள முடிகள் உதிர்ந்து, வாயில் எச்சில் சுரப்பது நின்று, வாயெங்கும் புண்கள், தொண்டைப்புண், வலி, உணவுக்குழாய், ஆசனவாய்ப்புண்கள், மூட்டுக்கு மூட்டு வலி, உடல்வலி,எப்போதும் வாந்தி வரும் உணர்வு, சமயங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு,கடுங்காய்ச்சல் – மருந்தெடுத்தால் உடல்வியர்த்து உடனே கடுங்குளிர், பற்கள் கிடுகிடுக்க குளிர்காய்ச்சல் என எல்லாவிதமான துயர்களும் அணிவகுத்து நின்றன.

இந்தச் சோதனையான நேரங்களில் அம்மா சொன்ன *தைரியமாக இரு!நானிருக்கிறேன்!* என்ற வார்த்தைகளை நினைத்து, நினைத்து மூலமந்திரமும், 108 குருபோற்றி,108 போற்றித்திருவுரு, கவசம் மூன்றையும் ஹெட் போனில் ( head phone) கேட்டுக் கொண்டு என்னைத் தைரியப்படுத்திக் கொண்டேன்.

மருத்துவர்கள் என்னை அடுத்த சோதனைக்குத் தயார் படுத்தினர்.மருத்துவர்கள் Bonemarrow Transplant ( BMT) செய்ய வேண்டும் என்றனர். அதாவது கால்முட்டி போன்ற நான்கைந்து இடங்களில் உள்ள Bonemarrow எனும் முக்கியமான ஒரு லேசான எலும்புப் படலம் போன்ற பொருளை ஒருவர் உடலில் இருந்து எடுத்து அடுத்தவர் உடலில் ( பெரும்பாலும் உடன்பிறந்தோர் உடலில்) பொருத்துவது இந்த சிகிச்சை. எனது சகோதரியின் Bonemarrow வை எனக்கு Transplant செய்தாக வேண்டும் என்றனர்.

*சித்ரவதை*

ஐயோ! மீண்டும் சித்திரவதையா, ஏற்கெனவே பட்ட துன்பங்கள் கண்முன் நிழலாட மீண்டும் மருவத்தூர் சென்று அம்மாவிடம் அழுது முறையிட்டோம்.
*அம்மா!இந்த சிகிச்சையின்போது நீங்கள் என்னுடனேயே இருக்க வேண்டும்! போனமுறை என்னால் தாங்கமுடியவில்லை அம்மா!* என முறையிட்டேன். எனது பெற்றோர்களும் அவ்வாறே முறையிட்டனர்.

எல்லாம் அறிந்த, நடமாடும் கலியுகக் கருணை தெய்வம் ஒரு மந்தகாசப் புன்னகையுடன், *பார்த்தாயா, எப்படி அம்மா உன்னைக் காப்பாற்றிக் கொடுத்தாள்…கவலைப்படாதே! தைரியமாக இருங்கள்.சிகிச்சையின்போது அம்மா உன்னுடன் இருப்பேன்!* என்று சொன்னார்கள்.

இந்தமுறை தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதம், சிறப்பு வார்டில் 11/2 மாதம் என 2 1/2 மாதம் மருத்துவமனை வாசம் இருக்க வேண்டும்; எல்லா பக்கவிளைவுகளும் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.

அம்மாவின் அளப்பரிய அருளும், கருணைப் பார்வையும் உள்ளபோது மலைபோல் வந்த துயர்கள் பனிபோல் மறையக் கேட்கவும் வேண்டுமா?

அம்மா சொன்னபடி என்னுடனேயே இருந்ததால், இந்தமுறை எனக்கு கடுமையான பக்கவிளைவுகள் இல்லை. BMT சிகிச்சை நன்கு முடிந்து 18 ஆம் நாள் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளிவந்தேன்.28 ம் நாள் வீட்டிற்கே வந்துவிட்டேன்.

இன்று 50 நாட்களைத் தாண்டிவிட்டேன். அம்மாவின் ஆசியால் படிப்படியாக உடல் தேறி வருகிறேன்.

எனக்கு உயிர்ப்பிச்சை தந்து, எனது சகோதரிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் காத்து, எங்கள் இருவரையும் மற்றவர்களைப் போல சகஜமாக வளைய வருகிற பெரும்பேற்றைத் தந்த அம்மாவின் பொற்பாதங்களை வணங்கி, நான் வேண்டிக் கொண்டபடி இந்த அற்புத நிகழ்ச்சியை சக்தி ஒளிக்கு சமர்ப்பிக்கிறேன்.

சக்திஒளி
ஜனவரி 13

குருவடி சரணம்.
திருவடி சரணம்.