நவராத்திரி விழாவின் சிறப்பு

0
541

மேல்மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தி, அருள்திரு அடிகளாராம், நம் அம்மாவின் உருவில் அவதாரம் செய்து,நாம் தொய்வின்றித் தொண்டாற்ற, தொடர்ந்து பல விழாக்களை

அமைத்துத் தந்து அவற்றின் வழி மக்களிடம் மனிதநேயம் மலர, அருள் வழங்கி வருகிறாள். நம் உள்ளங்களில் ஆணவப்புழுக்கள், பொறாமைப் பூச்சிகள் சேர்ந்து நம் உள்ளங்களைக் கெடுக்காமல் இருக்க அருள்
வழங்கி வருகிறாள். அதாவது “உங்கள் மனதை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகத் தான் இங்கு அடிக்கடி விழாக்களுக்கு அருள் வழங்கி வருகிறேன்.” என்பது அன்னையின் அருள்வாக்கு.

   சித்தர் பீடத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு வகையாக அமைகிறது. அன்னை ஆதிபராசக்தி, அருள்திரு அடிகளார் உருவில் எழுந்தருளி தம் உடலைவருத்தி நடத்தும் ஆன்மிகப் பெருவிழாக்கள் இரண்டு. ஆடிப்பூரத்தையொட்டி, மருவத்தூர் சித்தர்பீடவளாகத்தில் தம் உடலால் அங்க வலம் வந்து ஆன்மிக ஒளிபாய்ச்சுவது ஒரு நிகழ்ச்சி!

புரட்டாதி அமாவாசையன்று, நாகம் போல் தன் உடலை வளைத்து,நெளித்து தம் நாவால் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கிலிருந்து திரியை எடுத்து, அகண்டத் திரியை ஏற்றி , உலகுக்கு அருள்பேரொளி வழங்குவது மற்றொரு நிகழ்ச்சி.

சித்தர் பீடத்தில் நடைபெறும் விழாக்களில் நவராத்திரி விழா தனிச் சிறப்பை பெறுகிறது. “சிவனுக்கு உகந்தது சிவராத்திரி, சக்திக்கு உகந்தது நவராத்திரி” என்று போற்றப்படுகிறது. அன்னை ஆதிபராசக்தி, உலகனைத்தையும் படைத்தளித்து, ஒவ்வொரு நாளும் இரவு பகலாக இடைவிடாது காத்து வந்தாலும், இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் அலைமகளாகவும், மலைமகளாகவும், கலைமகளாகவும் அருளாட்சி செய்கிறாள் என்பது மரபு.

 “நவராத்திரி விழா” நம் பாவங்களைப் போக்கிக் கொள்ள நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு ஆகும். நவராத்திரி விழாவில் நமக்கு மூன்று அரிய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

1. அம்மாவால் கருவறைக்குள் ஏற்றிவைக்கப்படும் அகண்டத்தில், நாம் கருவறைக்குள் சென்று முக்கூட்டு எண்ணெய் ஊற்றிப் பேரொளிச் சுடராக உள்ள அன்னை ஆதிபராசக்தியை வழிபடல்.

2. அகண்டத்தில் இருந்து பெறப்படும் எண்ணெயை வாங்கி
வந்து நம் வீடுகளில் விளக்கேற்றி வழிபடல்.

3. இலட்சார்ச்சனையில் பங்கு பெறுதல்.

உலகிற்கு ஒளி வழங்கும் பொருள்கள் சூரியன், சந்திரன், நெருப்பு, ஆகிய மூன்றும் அன்னை ஆதிபராசக்தி நம்முள் ஒளியாகவும், நமக்கு ஒளி தரும் இம் மூன்றினுள்ளும் இருந்து அவளே ஒளி தருகிறாள் என்பதை அபிராமிபட்டர்”கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே” என்று போற்றுகிறார்.

“உலகில் அமைதி நிலவவும், மழைவளம் பெருகவும், அகண்ட தீபம் ஏற்றப்படுகின்றது” என்பது அன்னையின் அருள்வாக்கு.அப்படிப்பட்ட அகண்டப் பேரொளியை வழிபட்டால் நம் ஊழ்வினை தணிந்து, துன்ப இருள், அறியாமை இருள், ஆணவ இருள்,ஆகியவை நீங்கி வாழ்வில் இன்பம் காணலாம்.”அகண்டப் பேரொளியை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்.”என்பதும் “அகந்தையை அகற்றும் ஆற்றல் அகண்டத்திற்கு உண்டு.” என்பதும் அன்னையின் அருள்வாக்கு.ஆணவத்தின் மொத்த உருவமாக இருந்த மகிடாசுரனை அன்னை ஆதிபராசக்தி அழித்தாள் என்பதன் அடையாளம் தான் நவராத்திரி விழா ஆகும்.

 

  “நவராத்திரி அகண்டத்திற்குக் கண்டத்தை நிவர்த்தியாக்கும் தன்மை உண்டு.”என்பது அன்னையின் அருள்வாக்கு. இதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. கண்டமென்றால் எல்லை என்று ஒரு பொருள். அகண்டத்தை வழிபட்டால் எல்லையில்லாப் பிறவிகளுக்கு, ஒரு எல்லை கட்டி பிறவித்துன்பத்தைப் போக்கும் என்ற தன்மையுண்டு.

கண்டமென்றால் கவசம் என்று ஒரு அர்த்தம் உண்டு. நமக்கு அகண்டப் பேரொளி கவசமாக இருந்து துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் காக்கும் என்று தோன்றுகிறது. கண்டம் என்றால் ஆபத்து என்று பொருள். நம்மை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காக்கும் என்றும் ஒரு பொருள்.

n

 “அகண்டத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி முகர்ந்து வழிபடுவதால் மூன்று வினைகளும் நீங்கும்” என்பது அன்னையின் அருள்வாக்கு. உணவு, உறக்கமின்றி தவமிருக்கும் துறவிகளாலும் நீக்கிக்கொள்ளமுடியாத, மூன்று வினைகளையும் இல்லற வாழ்வில் ஈடுபட்டு வரும், நம் வினைகளை அகண்டப் பேரொளி நீக்கும்.”உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும்” என்றார் பாரதியார்.

நம் உள்ளத்தில் ஒளி உண்டாக இவ்வொளி வழிவகுக்கிறது. “அகண்டத்திலிருந்து பெறப்படும் முக்கூட்டு எண்ணெய் மூன்று வினைகளையும் நீக்கும்.” அகண்டத்தில் உள்ள அந்த சுடர் ஒளியானது, திரி வழியாக அகண்டத்திலுள்ள எண்ணெய்க்குச் செல்வதால், அந்த முக்கூட்டு எண்ணெய்க்கு, உடல் நோய்களையும், உள்ள நோய்களையும், பழைய வினைகளையும் நீக்கும் ஆற்றல் உண்டு.

 நவராத்திரியில் அகண்டத்திலிருந்து பெறப்படும் முக்கூட்டு எண்ணெய் வாங்கிவந்து நம் வீடுகளில் முன் வாசல், பின் வாசல், வழிபாடு அறை, போன்ற ஒன்பது இடங்களில் ஒன்பது நாட்கள் ஏற்றி வழிபட்டால் நம் ஊழ்வினை நீங்கி நல்லன நடைபெறுகின்றன. நம் கண்களுக்குத் தெரியாமல் நம் வீடுகளில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற்றப்பட்டு, நல்ல சக்திகள் குடியேறுகின்றன. “அகண்டத்தில் உள்ளவை பிண்டத்தில் உள்ளன “எனக் கூறுவார்கள்.

 உலகம், நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதைப்போல், நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆகியது. மணிகள் ஒன்பது. கோள்கள் ஒன்பது. தானியங்கள் ஒன்பது, என்பன போன்று ஒன்பது இரவுகள் நவராத்திரி!. “ஒன்பது” என்பதற்குத் தனிப் பெருமை உண்டு.வீட்டில் ஒன்பது இடங்கள் என்று அம்மா குறிப்பிடுவது போல நம் உடலிலும் ஒன்பது வாயில்கள் உள்ளன.திருமூலர் நம் உடலை “ஒன்பது வாசல் உடையதோர் பிண்டம்” என்று
கூறுகிறார்.ஆகவே சித்தர் பீடத்திலிருந்து எண்ணெயைப் பெற்று வந்து ஒன்பது இடங்களில் வீட்டில் ஏற்றி வைத்தால் துன்பங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். விளக்கினால் துன்பம் தீரும் என்பதைத் திருமந்திரம்

      ” விளக்கினை ஏற்றி ஒளியை அறிமின்!

       விளக்கின் முன்னே வேதனைத் தீரும்.” என்று கூறுகிறது.

 நவராத்திரி விழாவில் இன்னொரு நிகழ்ச்சி இலட்சார்ச்சனை ஆகும். “இலட்சியத்திற்காக செய்யப்படும் அர்ச்சனை இலட்சார்ச்சனை” என்பது அன்னையின் அருள்வாக்கு.

சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவில் நடைபெறும் இலட்சார்ச்சனையில் பங்குபெற்றி பாவங்களைப் போக்கிக் கொள்ளுதல். நம் வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் பெயர், நட்சத்திரங்களைக் கூறி சங்கல்பம் செய்யப்பட்டு 1008, 108, தமிழ் மந்திரங்களால் அர்ச்சனை செய்து ஆதிபராசக்தியை வழிபடும் நிலையே இலட்சார்ச்சனை ஆகும்.

எனவே நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நவராத்திரி இலட்சார்ச்சனையில் பங்குபெற்றிப்பயன் பெற வேண்டும். ஊழ்வினையும் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொடர்ந்து வருவதால் ஒவ்வொருவரின் பெயரிலும் தனித்தனியே அர்ச்சனை செய்ய வேண்டும்.

  அகண்டப் பேரொளியால் கல்வியில் ஆர்வம் காட்டி தேர்ந்த அறிவு பெற்றோர் பலர். உடல் நோய் நீங்கப் பெற்றோர். மன நோய் நீங்கப் பெற்றோர். மகப்பேறு பெற்றோர். நல்ல வேலை பெற்றோர். பதவி பெற்றோர் என்று பயன் பெற்றோர் இலட்சக் கணக்கில் உள்ளனர்.

சக்திகளே! வீடுவீடாகச் சென்று நவராத்திரி இலட்சார்ச்சனையில் பங்குபெற்றி நாம் பெற்ற பயன்களை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்.சாதிசமய வேறுபாடற்ற நிலையில் அனைவரும் கருவறைக்குள் சென்று முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபடலாமெனச் சொல்லுங்கள். அங்கிருந்து அகண்ட எண்ணெயைப்
பெற்று வீடுகளில் ஏற்றி, வாழ்வில் ஒளிபெறலாம் எனச் சொல்லுங்கள்.

  “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எண்ணத்தோடு உங்களோடு மற்றவர்களையும், நவராத்திரி விழாவில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியும், இலட்சார்ச்சனையில் பங்குபெறச் செய்தும் அம்மாவின் அருள்பெறுவோமாக!

                                                                                   ஓம் சக்தி!

நன்றி
சக்தி ஒளி
செப்டம்பர் 2008

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.