நீயா பேசினாய்?

0
261

நம் அன்னையின் தொண்டர் ஒருவருக்கு ஒரே பிரச்சனைகளாக இருந்தன. தொழிலில், சொத்தில், உடலில்,கடன், வேலையாட்களால், குழந்தைகளுக்கு எதாவது ஒன்று, அவர்களால் இவருக்கு என ஒன்று மாற்றி ஒன்று அழுத்தவே திக்குமுக்காடிப் போனார்.

இனி அவரின் வாய்மொழியாக கேட்போம்.

எனக்கு துக்கம் துக்கமாக வந்தது. அம்மா பேரில் கூட லேசாக கோபம் வந்தது. போய் ஒரு நாள் தனியாக பூஜை அறையில் உட்கார்ந்துட்டேன். பொங்கிப் பொங்கி அழுகையும் கோபமுமாக வந்தது.

ஆன்மிக குரு அம்மாவின் திருவுருவப் படம் கண்ணில் பட்டது. பொங்கி வந்த அழுகையோடு வெடித்து வந்தன வார்த்தைகள்,
என்னம்மா நீங்களே இப்படிப் பார்த்துட்டு சும்மா இருக்கலாமா….?
நான் என்னம்மா செய்வேன்….?
எங்க குடும்பம் உங்க திருவடியே கதின்னு கிடக்கிறோமே…..
உங்களைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூட நேரமில்லை….
நீங்கதானே எங்க தெய்வம்,
நீங்களே பாராமுகமாக இருந்தா, நாங்க எங்கே போவோம்?
என்ன செய்வோம்?
எங்களுக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாதும்மா…..எதுவும் புரியாதும்மா…..இப்படி எல்லாப் பக்கமும் நெருக்கினா நான் என்னம்மா செய்வேன்?

அப்போது “என்னடா…. புலம்புறே…? என்று ஒரு குரல்!
நான் திடுக்கிட்டு யாரது ?என்றேன். பேசியது அம்மாவா? பிரம்மையா? ஒன்றும் புரியவில்லை. படத்தை பார்த்து புலம்பிக் கொண்டிருந்ததால் பதிலும் பேச ஆரம்பித்தேன்.

அம்மா…..அம்மான்னு அலையிற எனக்கே இப்படின்னா……மற்றவங்க என்ன நினைப்பாங்கம்மா?

இப்ப என்ன கெட்டுப் போச்சுன்னு இப்படிப் புலம்பிட்டு இருக்கே…..நீ நல்லாத்தான இருக்கே…..படிப்படியா உன்னை வளர்த்துத் தானே இருக்கேன்…..நீ கஷ்டப்படறேன்னு யாராவது சொல்லுவாங்களாடா….?

இல்லம்மா, சோத்துக்கு கஷ்டமில்லை, துணிமணிக்கு கஷ்டமில்லை….ஆனா அது போதுமாம்மா…..நிம்மதி வேண்டாமாம்மா…..?

ஏண்டா என்னை மட்டும் நிம்மதியா வைக்கிறீங்களாடா….?

அம்மா, உங்க கதையே வேற! உங்களுக்கு எல்லாம் தெரியும்…முடிவு தெரியும்…நீங்க நினைச்சா முடிவைக்கூட மாத்திடுவீங்க…நான் அப்படியாம்மா….நம்ம முடிவு என்னன்னு தெரியாம ஒரே டென்ஷனா இருக்குதங்கம்மா…

அப்படி வாடா வழிக்கு…! என்ன சொன்னே…? உன் முடிவு என்னன்னு தெரியாதது உனக்கு டென்ஷனா..?
ஏண்டா உன் முடிவு என்னன்னு உனக்கு நான் அருள்வாக்குல சொன்னதில்லையா…?
உன் குடும்பம், சொத்து, பத்து எல்லாம் என் பொறுப்புன்னு நான் சொன்னதில்லையா…?
வேற ஒன்றும் இல்லை கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சுடா….அது மனசுல சிறகடிச்சுப் பறக்குதுடா….

அம்மா தொடர்ந்தாள், உனக்கு உன் மேலயும் நம்பிக்கை குறைஞ்சு போச்சு! என் மேலயும் நம்பிக்கை குறைஞ்சு போச்சு….
நான் கூறியிருக்கும் அருள்வாக்குகளை எல்லாம் மனதில் அசை போட்டுப் பாரடா……செய்ததையும், செய்வதையும் யோசிச்சுப் பாரடா….

உனக்குக் குடும்பம் அமைத்துக் கொடுத்தேன்…தொழில் அமைத்துக் கொடுத்தேன்…சமூகத்தில் கௌரவம் ஏற்படுத்திக் கொடுத்தேன்…சொத்து, சுகம் ஏற்படுத்திக் கொடுத்தேன். உனக்கு வெளிஉலகில் வேண்டியதை இன்னும் செய்துகொண்டு தானடா இருக்கிறேன்…

ஆனால் வெளி உலகை மட்டும் சரிசெய்தால் போதாதடா மகனே! உனக்கு உள்உலகம் என்று ஒன்று உள்ளதடா மகனே! அதையும் நான் சரிப்படுத்த வேண்டுமடா…..வளர்ச்சியும், சுகத்தையுமே பார்த்துக் கொண்டிருந்தால் உன் மனம் பக்குவப்படாதடா மகனே! கஷ்டம் வரவரத்தான் அனுபவம் வருமடா..

நன்றாக யோசித்துப் பார்! நீயாகப் புலம்பி உன் நிலையைச் சொன்னாலொழிய வேறு யாருக்காவது உன் நிலை என்ன என்று தெரியுமா?
ஒரு காலம்வரை கஷ்டப்பட்டு விட்டு இதற்கு மேல் என்ன ஆகுமோ? என்ற நிலை வரும்போதெல்லாம் உன்னைக் கைவிட்டு விடவில்லையே மகனே! ஏதோ ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றவில்லையா..? உன்னை அழவிட்டுத்தானே உனக்கு வைத்தியம் பார்க்கிறேன்…அதை அறியாத பைத்தியமாக இன்னும் இருக்கிறாயே?

உன் மனம் கஷ்டத்தால் அழ அழ நீ பக்குவப்படுவது உனக்குப் புரியவில்லையாடா..? உன்னைச் சுற்றியுள்ள உலகம் இப்போது நன்கு புரிகிறதல்லவா..? உன் கெட்ட எண்ணங்கள், உணர்வுகள் உன்னிடமிருந்து விலக ஆரம்பித்திருப்பது உனக்கே விளங்கவில்லையாடா மகனே!

மாற்றான் தோட்டத்து மல்லிகையைக் கூட மகளாக நினைக்கும் பக்குவம் வந்து கொண்டுள்ளதை நீ புரிந்து கொள்ளவில்லையாடா மகனே..? மகளிர் யாரைப் பார்த்தாலும் இவள் என் தாய், இவள் என் மகள், இவள் என் சகோதரி என்று நீ உன் மனதின் பக்கம் திரும்பி உனக்கு மட்டுமே கேட்கும்படி சொல்கிறாயே….! இன்னும் புரியவில்லையா உனக்கு…?

உன்னை நான் சுகத்திலே தாங்கிப் பிடித்திருந்தால் இந்த உணர்வுகள் உனக்குப் பெருகி இருக்குமாடா மகனே..?
கஷ்டப் படுபவனைப் பார்த்தாலே இன்று உனக்குக் கண்ணீர் வருகின்றதே ….இதையே ஒரு காலத்தில் பாவம்! அவர் விதி என்று ஒதுங்கிக் கொள்வாயே….இன்று உனக்காக நீ பிரார்த்திக்கும் போது அவனுக்காகவும் ஒரு சொட்டு நீர் உன் கண்களில் வருகிறதே … ஏன் மகனே?

எல்லாருமே இன்புற்றிருக்க வேண்டும் என உன் மனம் இன்று வேண்டுகிறதே….எதனால் மகனே..? எல்லாம் நீ பெற்ற அனுபவங்களால்தான் மகனே!

அந்த அனுபவத்தை உனக்குக் கொடுக்க உன்னை நான் வெள்ளையாக்க வேண்டும்…உன் மனதுக்கு இப்போது வெள்ளை அடித்துக் கொண்டுள்ளேன் மகனே!

உன்னிடம் எப்போது உன் குடும்பம், குழந்தைகள், கல்வி, சொத்து, சுகமெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேனோ …அன்றே அவை என் பொறுப்புக்கு வந்துவிட்டன மகனே!

என்னைச் சரணம் என்று வாயளவில் கூறாமல் என்னை உண்மையிலேயே சரணாகதி அடைந்த எவரையும் கைவிட மாட்டேன் மகனே!

உனக்கு நல்லது செய்வது போலவே, உனக்குத் துன்ப அனுபவங்களையும் கொடுத்து உன்னைச் சுத்தத் தங்கமாக்கி என்னுடன் இணைப்பேன் மகனே!

மனதை விடாதே! புலம்பாதே! சரணாகதித் தத்துவம் பற்றிய என் அருள் வாக்கை எடுத்துத் தினம் தினம் படி..! திரும்பத் திரும்பப் படி..! உன் உள்ளம் தெளிவடையும் ! கவலையை விடு! நான் சொன்ன கடமையைச் செய்! மற்றதையெல்லாம் என்னிடம் விட்டு விட்டு நல்லவனாக இருடா மகனே!

பிறகு ஒரே நிசப்தம்.

இது வரை பேசினது அம்மாவா?? உரக்கவே கேட்டேன்
இதுபோலெல்லாம் அம்மா பேச மாட்டார்களே! என்உள்மனம் கூறியது.
மீண்டும் குரல் கேட்டது ,இன்னுமா புரியவில்லை உனக்குள் இருக்கும் நான்தான் பேசினேன். எத்தனைமுறை அம்மா உனக்கு அருள்வாக்கை புற்று மண்டபத்திலும், அருட்கூடத்திலும் சொல்லிஇருக்கிறார்கள், அதையெல்லாம் என்னிடம் பத்திரமாக பதிய வைத்திருந்தேன் .

நீ அம்மாவை நினைத்து அழும்போது உன்னிடம் “நான்” என்ற அகந்தை இல்லை, நம்மால் எதுவும் செய்ய முடியும் என்ற அழுக்கும் இல்லை, அதனால்தான் உன்னிடமிருக்கும் மாயையை விலக்கிவிட்டு உன்னோடு பேச வந்தேன் , மனசு சொல்லியது.

இதை பலமுறை படித்து நாமும் சிந்திப்போம் .

சக்தி ஒளி 2000