பக்தியெனும் அற்புதம்

0
564

எந்த சமயத்தவராயினும் சரி, ஒரு பிரச்சனை என்று வரும்போது, பதறிப்போகிறோம். உதடுகள் இறைவனின் பெயரை உச்சரித்தாலும் உள்ளம் அலைபாயும். எவ்வளவு விரைவாய் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட முடியுமோ….அவ்வளவு விரைவாய் விடுபட முயற்சிப்போம். விஷயம் சிக்கலானது….மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று தெரியவரும் போது இறைவனின் காலடியில் விழுகிறோம். அந்த சந்தர்ப்பத்தில் நம்முடைய இறைபக்தி உண்மையானதாக இருக்கிறது. காரணம், ஒரு சுபமான முடிவை ஆண்டவன் நமக்குச் செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்.

இந்த பக்தியை நாம் குறை கூறத் தேவையில்லை. ஏனெனில் ஒருமுறை இறையருளை உணர்ந்தவனுக்கு , பக்தியின் கனியை ருசித்தவனுக்கு பக்தியின் மேல் நம்பிக்கை வருகிறது. அடுத்தடுத்து வரும் சந்தர்ப்பங்களில் அவன் பக்தி மூலம் இறைவனைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி முடிவில் சம்பூர்ண பக்தியுடையவர்களில் ஒருவனாகிறான்.

இன்னொரு வகை பக்தி, சுயநலமற்றதுதான் என்றாலும் முழுக்க முழுக்க ஆண்டவனுக்கே தன்னை அர்ப்பணித்து விட்டவர்கள் என்று சொல்ல முடியாது. தனக்குக் கீழே இருப்பவர்களுக்கு, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு, அவர்களை நேசிக்கிற காரணத்தால் இறைவனின் உதவியை நாடுபவர்கள் இவர்கள். ஆண்டவனுக்கும், மற்ற மனிதர்களுக்கும் இடையே தன்னைப் பாலாமாக்கிக் கொள்ளும் இவர்களின் எண்ணங்கள் இறைவனால் புனிதமாக்கப்படுகின்றன. ஆகையால் இவர்கள் வெற்றியை எளிதில் பெறுகிறார்கள். அல்லது கடின உழைப்பிற்குப் பின் வெற்றி பெற்றாலும் துன்பங்களை மறந்து விடுகிறார்கள்.
வெற்றிக்காக மட்டுமே இறைவனைத் துதிக்கிறார்கள். இவர்களின் பக்தி நற்செயல்களாலும் நல்ல எண்ணங்களாலும் நிறைந்திருக்கிறது.

இவைதவிர மற்றுமுள்ள ஒரு நிலை நம்மில் அதிகம் பேருக்கு சாத்தியப்படாது போகிறது.தனக்காயினும் சரி, பிறருக்காயினும் சரி நிகழ்வுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் அதன் கர்த்தாவை பக்தியுடன் சேவித்துக் கொண்டிருப்பது அதிக சந்தோஷமும் இவர்களைப் பாதிக்காது. ஆழ்ந்த துக்கமும் இவர்களைப் பாதிக்காது ,எல்லாம் அவன்செயல் என்று எளிதில் நிகழ்வுகளில் இருந்து விலகி நிற்பார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் எல்லா விஷயங்களிலும் இறைவனைக் காண்கிறவர்கள் இவர்கள்.

இந்த நிலையை நாம் நேரடியாக அடைய நம்முடைய குணங்கள் தடைகளாக இருக்குமென்றாலும், மிகச் சிறிய அளவில் நம்முள் முகிழ்க்கும் பக்தியானது கொஞ்சம் கொஞ்சமாய் இறைவனைச் சேர நம்மைத் தயார்படுத்தும்.
பலன்கருதாப் பக்தர்களாக நாமும் ஒருநாள் மாறப் போவது நிச்சயம்.

சக்திஒளி
ஜூலை 88