பக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?

0
292

பக்தி என்றால் என்ன? கடவுளிடம் கொள்கிற தூய்மையான அன்பே பக்தி. இந்த பக்தியுணர்வு சொல்லிக் கொடுத்து வருவதல்ல. தானாக வருவது அல்லது திருவருளால் வருவது.

நீங்கள் எந்த சூழ்நிலையில் அம்மாவிடம் வந்தீர்கள்? அம்மா உங்களுக்குக் கொடுத்த அனுபவங்கள் ஏதாவது இருந்தால் அதையே எண்ணி எண்ணி நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் தம் கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட நல்ல பல மாற்றங்கள் இவற்றையெல்லாம் அடிக்கடி நினைத்து நினைத்து மனத்தில் அசைபோட்டுப் பழகுங்கள். அம்மாவுடன் மானசீகமான ஒரு பிடிப்பையும், பாசத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். *அவளது எல்லையில்லாக் கருணைக்கு நாம் பாத்திரமா? என எண்ணிப் பாருங்கள்.அகங்காரம் அடங்கும்.*

அடுத்தவர்களுக்கு அம்மா செய்ததை ஒப்பிட்டுப் பார்த்து நமக்கு அம்மா அப்படியெல்லாம் செய்யவில்லையே என்ற பொறாமை உணர்ச்சி கொள்ளாதீர்கள். நமக்கு அம்மா இதைச் செய்தாளே என்பதை எண்ணிப் பாசம் கொள்ளுங்கள்.

அடிக்கடி சக்திஒளி படித்து பக்தர்கள் வாழ்வில் அம்மா காட்டிய கருணையை எண்ணிக் கசிந்துருகப் பழகிக் கொள்ளுங்கள். அம்மா கதையைக் கேட்பதில் ருசி வர வேண்டும். *மனம் எங்கே மேய்ந்தாலும், அலைந்தாலும் அடிக்கடி அம்மாவை நினைத்து நினைத்து அவள் நினைவே உங்கள் மனத்தை ஆட்சி செலுத்த வேண்டும்.*

காலையில் படுக்கையை விட்டு எழும்போது மூலமந்திரம் சொல்லி, *அம்மா! இன்று முழுவதும் என்னுள் இருந்து என்னை வழி நடத்த வேண்டும்.* என்று வேண்டிக் கொண்டு படுக்கையை விட்டு எழுங்கள்.

எப்போதெல்லாம் உங்களுக்கு சலிப்புணர்ச்சி வருகிறதோ – தனிமை, வெறுப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் 108 குரு போற்றி, திருவுரு போற்றி,கவசம்,சக்தி வழிபாடு மனத்திற்குள் சொல்லிப் பழகுங்கள்.

தினம் விடியற்காலை மூன்று மணி அல்லது நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுந்து நீராடிவிட்டு 1008 மந்திரம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நாளும் தெய்வ நினைவையும் ஆன்மிக உணர்வுகளையும் தூண்டுகிற புத்தகங்களையே படியுங்கள். மகான்கள், ஞானிகள் வரலாறுகளைத் தேடிப்பிடித்து படித்து வாருங்கள்.

மாலையில் வழிபாட்டு வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். மனம் வெறுமையோடு இருக்கும்போதெல்லாம் அன்னையின் மந்திரங்களை மனத்துள் சொல்லி வாருங்கள்.

இரவு படுக்கப் போகும்போது *தாயே! நான் அறிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள், அறிந்து செய்த புண்ணியம், அறியாது செய்த புண்ணியம் எல்லாம் உனக்கே அர்ப்பணம்! நான் வெறும் கருவி; நீதான் என்னை ஆட்டுவிப்பவள்.* என வேண்டிக்கொண்டு குரு போற்றி 3 முறை கூறிவிட்டுப் படுங்கள்.

இப்படியெல்லாம் செய்து வந்தால் படிப்படியாக உங்கள் மனத்தில் அம்மா என்ற தெய்வ நினைப்பே உண்டாகும். தெய்வ நினைப்பு குடிபுகுந்த நெஞ்சில் வேறு வேண்டாத எண்ணங்கள் எழுகிற வாய்ப்பு தடைபட்டுப் போகும். புதிய கர்மம் இவ்வாறு தடுக்கப்படுகிறது. வழிபாட்டுப் பயிற்சியால் மனத்துள் கிடந்த பூர்வ ஜென்ம வாசனை ரப்பரால் அழிக்கப்படுவது போல தேய்ந்து கொண்டு வரும்.

*இப்படியெல்லாம் மனத்தை பழகியும், பழக்கியும் வந்தால் நாளடைவில் அம்மா உங்கள் மனக்கோயிலில் வந்து அமர்வாள். பிறகு உங்கள் உள்ளிருந்து வழி நடத்துவாள்.பிரச்சனை வரும்போது உள்ளுணர்வு மூலம் பதில் சொல்வாள்.*

நம் பழம்பிறவி வாசனைகள் நமது முயற்சிகளுக்கு எதிராக எழுந்து தடைபோடும். மனத்திலிருந்து அழுக்குகள் பொங்கி பொங்கி எழும். அப்போதெல்லாம் அம்மா மந்திரம் படித்து அந்த வாசனைகளை எரித்து விட வேண்டும். உங்களுக்குத் தியானம் எளிதாக வருமாயின் தியானம் பழகி வரலாம்.

அப்படியும் மனம் சுத்தமாகவில்லை எனில் தொண்டு செய்து வாருங்கள். தொண்டின் மூலம் மனம் சுத்தப்பட வழியுண்டு. உங்கள் மனம் எவ்வளவுக்கெவ்வளவு சுத்தமாகிறதோ அந்தளவு உங்கள் மனமே குருவாக இருந்து உங்களை வழிநடத்தும். இவையெல்லாம் பக்தியை வளர்த்துக் கொள்ள வழிகள். *எல்லாவற்றிற்கும் மேலாக குருவின் தயவு இருந்தால் எல்லாம் கைகூடும்.*

ஆசிரியர்
சக்திஒளி
பிப் – 99