மந்திரவழிபாட்டின் மகத்துவம்

0
332

தெய்வ சக்திகளைத் துணையாக்கித் தரும் உரு ஏற்றப்பட்ட அன்னையின் மந்திரங்கள்…

கண்கண்ட தெய்வம்! கலியுக அவதாரம் மேல்மருவத்தூர் அன்னை வழங்கிய மந்திரங்கள் இன்று புத்தக வடிவிலும், ஒலி நாடா வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மந்திரங்கள் எல்லாம் எதற்கு? இந்த மந்திரங்களில் என்ன விஷேசம் உள்ளது ?

“ஓம் சக்தி மந்திரம் தான் உனக்குத் தாரக மந்திரம்.”

“எனது மந்திரம் படிப்பவர்களுக்குத் தான் இனிமேல் காலம். அது பொன்னானகாலம். பொன்னான காலம் என்பதை விடப் பொன்னான வாழ்வு என்று சொல்லலாம்”.

“எவனொருவன் அடிகளார் 108 போற்றி, 1008 போற்றி படித்து வருகிறானோ அவனுக்குப் பாவ விமோசனமடா!”

“மந்திர வழிபாட்டில் உன் பாவங்கள் குறைவதோடு உன் ஊழ்வினை கரையவும் வாய்ப்புண்டு.”

“கஷ்டம் வரும்போதெல்லாம் மந்திரநூல் படி! எல்லாவற்றையும் உரு ஏற்று”

“ஓய்வு கிடைக்கிறபோதெல்லாம் அம்மா மந்திரம் சொல்லி உருவேற்று”

“மந்திரங்களை மனத்திற்குள் படித்தாலும் போதும்”.

என்பவை எல்லாம் மந்திரங்களின் மகிமை பற்றிக் கூறுகின்ற அன்னையின் அருள்வாக்குகள்.

1008 மந்திரங்களுக்கு 1008 சூட்சுமங்களை வைத்திருக்கிறேன் என்று கூறுகின்றார்கள் அன்னை.

எந்தச் சூழ்நிலையிலும் மூலமந்திரம், அடிகளார் 108 மந்திரம், அம்மாவின் 108 மந்திரம் இவற்றை முணுமுணுத்தபடியே மனம் இருக்குமானால் அசுத்தமான எண்ணங்கள் புக முடியாது. அதனால் உடம்பும், மனமும் சுத்தமாகும். உடம்பு மந்திரமயமாகும். சூக்கும சரீரம் தூய்மையடையும். குண்டலினி சக்தி வேலை செய்யும். திறமைகள் வளரும். தெய்வ சக்திகள் துணைவரும். ஊழ்வினை தணியும். புதுப் பொலிவு ஏற்படும். இறப்பிற்குப் பிறகு ஆன்மா நல்ல கதி அடையும். இப்படி மந்திர வழிபாட்டில் ஏராளமான பலன் உண்டு. இது மெய்ஞ்ஞான ரீதியான விளக்கம்…

விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால்……

நமது உடலிலே 72 000 நாடிகள் உள்ளன. அந்த 72 000 நாடிகளில் …….

பிரதான நாடிகள் 1008.
அதி பிரதான நாடிகள் 108.
சக்கரங்கள் 6

1008 படிக்கும் போது பிரதான நாடிகள் தூண்டிவிடப்படும்.
108 படிக்கும் போது அதி பிரதான நாடிகள் தூண்டிவிடப்படும்.
மூல மந்திரம் படிக்கும் போது 6 சக்கரங்களினூடு, பாம்பு வடிவிலே சுருண்டு கிடக்கின்ற குண்டலினி சக்தி வெளிப்பட்டு தெய்வக் காட்சிகள் கிடைக்கும். அம்மா பேசுவார்கள். சக்ஸ்ரார தளத்திற்கு வரும்பொழுது ஆன்மிக ரீதியில் மிகப் பெரிய உயர்ந்த ஸ்தானத்தை அடைவார்கள்.

அந்த வகையிலே அம்மா நமக்கு அருளியுள்ள மந்திரங்களையும் அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து கொள்வோம்.

இறைவனை அடைவதற்கு இசை ஒரு பாலம். அந்த அடிப்படையில் நம் அன்னையின் ஆணைக்கு இணங்க அன்னையால் உரு ஏற்றப்பட்ட மந்திரங்களின் ஒலி அலைகள் பிரபஞ்சமெங்கும் பரவியவண்ணம் உள்ளன.

பஞ்ச பூதங்களால் ஆனது பிரபஞ்சம். அதை ஓம் எனும் ஒலியாய் நின்று இயங்கச் செய்து உயிர்க்குலத்தைப் பேணி வருகிறாள் அன்னை ஆதிபராசக்தி.

அந்த ஓம் எனும் ஆன்மிகப் பேரொலியை நாள்தோறும் நாம் உச்சரித்து நற்கதி அடையவே அதற்குப் பன்முகங் கொடுத்து நெறிப்படுத்தி, வரிவடிவாக்கி; வழிபாட்டிற்குரிய தமிழ் மந்திரங்களாக அன்னையே வழங்கியுள்ளாள்.

அன்னை ஆதிபராசக்தி இனம், மதம், ஜாதி, மொழி எல்லைகளைக் கடந்தவள். ஆயினும் இந்தக் கலியுகத்தில் அவள் அவதரித்த மண்ணும், மக்களும் எளிய வழியில் தன்னை அடைந்து மாண்புறும் வகையில் மந்திரங்களைத் தமிழிலேயே ஆக்கித் தந்தாள். மந்திரங்கள் அதன் பொருள் உணர்ந்து ஓதப்படவேண்டும் என்ற நோக்கில் அன்னை நமக்குத் தமிழ் மொழியிலேயே மந்திரங்களைக் கொடுத்துள்ளாள்.

உலகிலேயே மருவத்தூரில் மட்டும் தான் நூறு சதவிகிதம் அர்ச்சனை, அபிஷேக வேள்விகள் தமிழ் மந்திரங்களைக் கொண்டே நடத்தப் படுகின்றது. அந்த வகையில் மருவத்தூருக்குத் தனிச் சிறப்பு உண்டு.

அன்னை இந்த அரிய மந்திரங்களை நாள்தோறும் ஒலிக்கச் செய்து, ஆன்மிக வேள்வி நடத்தி பஞ்சபூதங்களைப் பயன்வழங்கச் செய்கின்றாள். மழை வளம் சுரக்கச் செய்கிறாள். கனிவளம் பெருகச் செய்கின்றாள்.
உலகப் போர்புயல்களை ஓயவைத்து அமைதி தவளச் செய்கிறாள். ஒரே தாய்! ஒரே குலம்! எனும் மனித நேயம் மலரச் செய்கிறாள்.

இத்தனை பெரிய சக்தி இந்த மந்திரங்களுக்கு உண்டு.

இவை வீட்டு வழிபாட்டிற்கும், கூட்டு வழிபாட்டிற்கும், நாட்டு வழிபாட்டிற்கும், ஏன்?

உலக வழிபாட்டிற்கும் கூட உரித்தானது! உரிமையானது!

அன்னை ஆதிபராசக்தியை மனம், மொழி, மெய் எனும் மூன்று வகை வழிபாட்டால் அடைய முடியும்.

மனதால் வழிபடுவது தியானம்….
மொழியால் வழிபடுவது மந்திரம் உரைத்தல்….
மெய்யால் வழிபடுவது எளியவர்க்குத் தொண்டு செய்தல்.

இம் மூன்றில் நடுநாயகமாக விளங்குவது மந்திரம் படித்தல்.

இம் மந்திரங்களைப் படிப்பதால் பல்வேறு தெய்வ அனுபவங்கள் கிட்டும். மன அழுத்தமும் வருத்தமும் நீங்கி அமைதியும், மகிழ்வும் கிட்டும்.

இத்தகைய மந்திரங்களை உச்சரித்து வாழ்வில் மேன்மை அடைந்தோர் ஒன்றல்ல, இரண்டல்ல….. பலகோடி.

இந்த மந்திரங்களும், அன்னையைப் போற்றுதற்குரிய பாரம்பரியம் மிக்க பாடல்களும் அடங்கிய மந்திரங்கள் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் தெய்வீக இசை மணம் கமழ வைக்கின்றது. நம் இல்லத்துக்கும், உள்ளத்துக்கும் மட்டுமல்ல, சுற்றுப் புறச் சூழலையும் ஈர்த்து நம்மை சுற்றியிருப்பவர்களையும் பண்படுத்தும். மொத்தத்தில் இயந்திர வாழ்க்கையை, இயற்கை மணமாக்கும் தன்மை கொண்டவை.

அன்னையின் இந்த மந்திரங்கள் மனத்திற்கு மருந்தாகும். மனத்திற்கு மட்டுமல்ல … பல உடல் நோய்களைத் தீர்க்கும் ஆற்றலும் இவற்றுக்கு உண்டு. முக்கியமாக சரியாக உச்சரிப்பதன் மூலமே சரியான பலனை அடைய முடியும் என்பது அன்னையின் அருள்வாக்கு.

இதில் இடம்பெறும் மந்திரங்களான……

மூலமந்திரம் :

அன்னை அருள்நிலையில் வழங்கிய மந்திரம். ஆதி மந்திரம். தலையாய மந்திரம். தலை காக்கும் மந்திரம்.

“ஒரு மனிதனுக்கு உயிர்ப்பு நூல் மந்திர நூல்! அது போதுமடா! வேறெதுவும் தேவையில்லை! நீ இங்கு கோயிலில் இருப்பது சில நேரம் தான். அந்த நேரங்களில் மூலமந்திரம் சொல்லிக்கொண்டே இரு!”

“நீ மருவத்தூர் வரும்போதெல்லாம் சப்த கன்னியர் சந்நிதியில் ஒவ்வொரு தேவியின் இடத்தில் நின்று மூலமந்திரம் சொல்லு”

“ஒரு நல்ல காரியம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் ஒரு தாளை எடுத்துச் சதுரமாக மூலமந்திரம் எழுதவும். பெண்களுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமானாலும் ஒரு தாளில் முக்கோண வடிவில் மூலமந்திரம் எழுதவும். தனியிடம் அமர்ந்து செய்ய வேண்டும்.”

“யாராவது உன்னைத் திட்டினால் எதிர்த்துப் பேசாதே! மூல மந்திரம் சொல்!”

108 அடிகளார் போற்றி:

இது குரு வணக்கம். தெய்வத்தை நமக்குக் காட்டுபவர் குரு. ஆதலின் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

“அடிகளார் 108 போற்றி ஒரு ரகசியப் புதையல். அதன் அருமை யாருக்கும் தெரியாது.”

“அடிகளார் போற்றி மூன்று தடவை படித்துவிட்டுத் தினமும் படுத்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும். இம்முயற்சியில் வெற்றி பெற்ற ஆன்மாக்களுக்கு மறுபிறவி இல்லை.”

“கிருத்திகை நாளில் நீ தியானம், மௌனம், விரதம் எதுவும் செய்ய வேண்டாம். அடிகளார் 108 போற்றியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கவும்.”

“நினைத்தது நிறைவேற வேண்டுமாயின் 51 தடவை அடிகளார் போற்றி படி!”

வேண்டுதற்கூறு:

இது அன்னை ஆதிபராசக்திக்கு நாம் விடும் அழைப்பு. அடிகளாரின் மேனிக்கு அன்னையை வரவழைக்கும் வேண்டுதற்கூறு நம் வீட்டுப் பூஜை அறைக்கும் அன்னையை அழைத்து வரும்.

“வேண்டுதற்கூறு படித்து வந்தால் வேண்டியது கிடைக்கும்”

போற்றித் திருவுரு:

அன்னையை ஆராதனை செய்வதற்குரிய அடிப்படை மந்திரங்கள் தான் போற்றித் திருவுரு என அழைக்கப்படுகின்றன.

108 போற்றித் திருவுரு, 1008 போற்றித் திருவுரு, 1008 போற்றி மலர்கள், 108 மந்திரக் கூறு உள்ளடங்கியது.

இவற்றிலே 1008 மந்திரங்களில் ஒன்று மட்டும் போதாதா? ஏன் இரண்டு பிரிவுகளாக அதாவது 1008 போற்றித் திருவுரு, 1008 போற்றி மலர்கள் எனும் அடிப்படியில் அன்னை நமக்குக் கொடுத்துள்ளார்கள்? என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது. அதிலும் ஏன் அவை குறிப்பிட்ட நாட்களில் தான் படிக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் தோன்றக் கூடும்!

இவை இரண்டுமே வாசி யோகத்தினை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டவை. வாசி யோகம் என்பது மூச்சுப் பயிற்சியான பிரணாயாமத்தினை உள்ளடக்கியது. நமது உடலில் சுவாசம் ஒரே மாதிரியாக நடைபெறுவதில்லை. இடகலை, பிங்கலைத் தத்துவத்தில் நடைபெறுகின்றது.

இடகலைத் தத்துவப்படி 3 நாட்கள் இடது மூக்கில் சுவாசம் அதிகமாகவும் வலது மூக்கில் குறைவாகவும்,
பிங்கலைத் தத்துவப்படி 4 நாட்கள் வலது மூக்கில் சுவாசம் அதிகமாகவும் இடது மூக்கில் குறைவாகவும்
நடைபெறுகின்றது. இந்த இடகலை, பிங்கலைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த 1008 மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன.

போற்றித் திருவுருவைப் பார்த்தோமேயானால் பெரும்பாலும் மெல்லின எழுத்துக்கள் இருக்கும்.
போற்றி மலர்களைப் பார்த்தால் வல்லின எழுத்துக்கள் இருக்கும்.

அம்மாவே இம்மந்திரம் எழுதியவர்களின் மனதிற்குள் புகுந்து அவர்களைக் கருவியாகப் பயன்படுத்தி நமக்கு 1008 மந்திரங்களையும் அதற்கான பலன்களையும் கொடுத்துள்ளார்கள்.

4 நாட்களும் பிங்கலைத் தத்துவத்தில் போற்றித் திருவுருவும் , மீதி 3 நாட்களும் வடகலைத் தத்துவத்தில் போற்றி மலர்களும் எழுதப்பட்டுள்ளது. அந்தந்த நாளுக்குரிய மந்திரங்களைப் படிக்கும் போது வாசி யோகமானது நம்மை அறியாமலேயே செய்யப்படுகின்றது. மூச்சுப் பயிற்சி செய்யப்படுகின்றது. வாசியோகம் செய்துவிடுகின்றோம்.

இதனாலே தான் அம்மா 1008 மந்திரங்களைப் படி! அதிலே 1008 சூட்சுமங்களை வைத்திருக்கின்றேன் என்று கூறுகின்றார்கள்.

1008 போற்றி மலர்கள் (செவ்வாய், புதன், வியாழன்) கிழமைகளிலும்………
1008 போற்றித் திருவுரு(வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்) தினங்களிலும் பாடுதற்கும், கேட்பதற்கும் பலன்
தரக்கூடியது.

“வீட்டு மனை வைத்துக் கொண்டு வீடு கட்ட முடியாமல் தரிசாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள், அங்கே மஞ்சள்நீர் தெளித்து, 1008 மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து 1008 மந்திரம் படித்து வழிபாடு செய்து வந்தால் வேலைகள் சரிவர நடக்கும்.”

“அதிகாலையில் எழுந்து இந்த 1008 மந்திரங்களைத் தொடர்ந்து சொல்லி வருபவர்களை மட்டுமன்றி அவர்களின் பரம்பரையையே காப்பேன்” என்பது அன்னையின் வாக்கு.

சக்தி கவசம்:

மனம், வாக்கு, மெய் இந்த மூன்றையும் தீவினைகள் அண்டாது காக்கும் ஆற்றல் கொண்டது.

“உனக்கு உடம்பு சரியில்லை என்றால் சக்தி கவசம் படி”

சக்தி வழிபாடு:

துணை ஆலயங்களான மன்றங்களில் கூட்டு வழிபாடுகளில் பிரதான இடத்தை வகிப்பது சக்தி வழிபாடு.

அன்னையின் திருப்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும் காலை நேரத்தில் மனத்திற்கு அமைதியும், புத்துணர்ச்சியும் ஆன்மிக உணர்வும் ஊட்டக் கூடியவை.

ஆதிபராசக்தி சரணம்:

இது பூஜை நிறைவு பெறுவதற்கு முன் பாடவேண்டிய மங்கள சாசனம் போன்றது.

வாழ்த்து:

இதனைப் பாடியே அன்னையின் பூஜை நிறைவு செய்யப்பட வேண்டும்.

கிடைத்தற்கரிய அன்னையின் இந்த மந்திரங்களும் பாடல்களும் நம் இல்லங்களில் இருப்பதும், ஒலிப்பதும்; மகாலக்ஷ்மி இருப்பதும், கலைமகள் இசைப்பதும் போலாகும். மேல்மருவத்தூர் அன்னை வழங்கிய இந்த அரிய மந்திரங்களை நாள்தோறும் உருஏற்றி குருவருளும் திருவருளும் பெறுவோம்.