மந்திரவழிபாட்டின் மகத்துவம்

0
581

தெய்வ சக்திகளைத் துணையாக்கித் தரும் உரு ஏற்றப்பட்ட அன்னையின் மந்திரங்கள்…

கண்கண்ட தெய்வம்! கலியுக அவதாரம் மேல்மருவத்தூர் அன்னை வழங்கிய மந்திரங்கள் இன்று புத்தக வடிவிலும், ஒலி நாடா வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மந்திரங்கள் எல்லாம் எதற்கு? இந்த மந்திரங்களில் என்ன விஷேசம் உள்ளது ?

“ஓம் சக்தி மந்திரம் தான் உனக்குத் தாரக மந்திரம்.”

“எனது மந்திரம் படிப்பவர்களுக்குத் தான் இனிமேல் காலம். அது பொன்னானகாலம். பொன்னான காலம் என்பதை விடப் பொன்னான வாழ்வு என்று சொல்லலாம்”.

“எவனொருவன் அடிகளார் 108 போற்றி, 1008 போற்றி படித்து வருகிறானோ அவனுக்குப் பாவ விமோசனமடா!”

“மந்திர வழிபாட்டில் உன் பாவங்கள் குறைவதோடு உன் ஊழ்வினை கரையவும் வாய்ப்புண்டு.”

“கஷ்டம் வரும்போதெல்லாம் மந்திரநூல் படி! எல்லாவற்றையும் உரு ஏற்று”

“ஓய்வு கிடைக்கிறபோதெல்லாம் அம்மா மந்திரம் சொல்லி உருவேற்று”

“மந்திரங்களை மனத்திற்குள் படித்தாலும் போதும்”.

என்பவை எல்லாம் மந்திரங்களின் மகிமை பற்றிக் கூறுகின்ற அன்னையின் அருள்வாக்குகள்.

1008 மந்திரங்களுக்கு 1008 சூட்சுமங்களை வைத்திருக்கிறேன் என்று கூறுகின்றார்கள் அன்னை.

எந்தச் சூழ்நிலையிலும் மூலமந்திரம், அடிகளார் 108 மந்திரம், அம்மாவின் 108 மந்திரம் இவற்றை முணுமுணுத்தபடியே மனம் இருக்குமானால் அசுத்தமான எண்ணங்கள் புக முடியாது. அதனால் உடம்பும், மனமும் சுத்தமாகும். உடம்பு மந்திரமயமாகும். சூக்கும சரீரம் தூய்மையடையும். குண்டலினி சக்தி வேலை செய்யும். திறமைகள் வளரும். தெய்வ சக்திகள் துணைவரும். ஊழ்வினை தணியும். புதுப் பொலிவு ஏற்படும். இறப்பிற்குப் பிறகு ஆன்மா நல்ல கதி அடையும். இப்படி மந்திர வழிபாட்டில் ஏராளமான பலன் உண்டு. இது மெய்ஞ்ஞான ரீதியான விளக்கம்…

விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால்……

நமது உடலிலே 72 000 நாடிகள் உள்ளன. அந்த 72 000 நாடிகளில் …….

பிரதான நாடிகள் 1008.
அதி பிரதான நாடிகள் 108.
சக்கரங்கள் 6

1008 படிக்கும் போது பிரதான நாடிகள் தூண்டிவிடப்படும்.
108 படிக்கும் போது அதி பிரதான நாடிகள் தூண்டிவிடப்படும்.
மூல மந்திரம் படிக்கும் போது 6 சக்கரங்களினூடு, பாம்பு வடிவிலே சுருண்டு கிடக்கின்ற குண்டலினி சக்தி வெளிப்பட்டு தெய்வக் காட்சிகள் கிடைக்கும். அம்மா பேசுவார்கள். சக்ஸ்ரார தளத்திற்கு வரும்பொழுது ஆன்மிக ரீதியில் மிகப் பெரிய உயர்ந்த ஸ்தானத்தை அடைவார்கள்.

அந்த வகையிலே அம்மா நமக்கு அருளியுள்ள மந்திரங்களையும் அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து கொள்வோம்.

இறைவனை அடைவதற்கு இசை ஒரு பாலம். அந்த அடிப்படையில் நம் அன்னையின் ஆணைக்கு இணங்க அன்னையால் உரு ஏற்றப்பட்ட மந்திரங்களின் ஒலி அலைகள் பிரபஞ்சமெங்கும் பரவியவண்ணம் உள்ளன.

பஞ்ச பூதங்களால் ஆனது பிரபஞ்சம். அதை ஓம் எனும் ஒலியாய் நின்று இயங்கச் செய்து உயிர்க்குலத்தைப் பேணி வருகிறாள் அன்னை ஆதிபராசக்தி.

அந்த ஓம் எனும் ஆன்மிகப் பேரொலியை நாள்தோறும் நாம் உச்சரித்து நற்கதி அடையவே அதற்குப் பன்முகங் கொடுத்து நெறிப்படுத்தி, வரிவடிவாக்கி; வழிபாட்டிற்குரிய தமிழ் மந்திரங்களாக அன்னையே வழங்கியுள்ளாள்.

அன்னை ஆதிபராசக்தி இனம், மதம், ஜாதி, மொழி எல்லைகளைக் கடந்தவள். ஆயினும் இந்தக் கலியுகத்தில் அவள் அவதரித்த மண்ணும், மக்களும் எளிய வழியில் தன்னை அடைந்து மாண்புறும் வகையில் மந்திரங்களைத் தமிழிலேயே ஆக்கித் தந்தாள். மந்திரங்கள் அதன் பொருள் உணர்ந்து ஓதப்படவேண்டும் என்ற நோக்கில் அன்னை நமக்குத் தமிழ் மொழியிலேயே மந்திரங்களைக் கொடுத்துள்ளாள்.

உலகிலேயே மருவத்தூரில் மட்டும் தான் நூறு சதவிகிதம் அர்ச்சனை, அபிஷேக வேள்விகள் தமிழ் மந்திரங்களைக் கொண்டே நடத்தப் படுகின்றது. அந்த வகையில் மருவத்தூருக்குத் தனிச் சிறப்பு உண்டு.