மறக்கக் கூடாத உபதேசம்

0
746

5.8.1980 செவ்வாய்க்கிழமையன்று அடுத்து வரப்போகும் ஆடிப் பூரத்திற்குச் செய்ய வேண்டிய பணிகட்குப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை அன்னை ஆதிபராசக்தி தொடங்கினாள். சரக்கறை, சமையல், விநியோகம், பாதுகாவல் என்ற நான்கும் மிக இன்றியமையாத பகுதிகள் அல்லவா? இவற்றிற்கு உரிய பொறுப்பாளர்களை முதலில் நியமித்துவிட்டுத் தண்ணீர் வசதி, விளக்குகள், மின்சாரம், சொற்பொழிவு மேடை முதலிய பிறவற்றிற்கும் பொறுப்பாளர்களை நியமித்தாள்.

எல்லாவற்றையும் விட முக்கியமானவை கலசபூசை, யாகம் என்பவையாகும். அவற்றிற்கும் இளைய அன்பர் ஒருவரை நியமனம் செய்தாள். இறுதியாக அனைவருக்கும் சேர்த்து எவ்வாறு தத்தம் கடமைகளை அவர்கள் செய்ய வேண்டும் என்று கூறிய அறிவுரைகள் (உபதேச மொழிகள்) என்றும் மறக்கற்பாலன அல்ல. அங்கு இப்பணிகளை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த அறிவுரைகள் பொருந்தும் என்பதில்லை. உலகின் எல்லாப் பாகங்களில் வாழும் எல்லாருக்கும் எல்லாக்காலத்திற்கும் இந்த அறிவுரைகள் பொருந்தும்.

நான் அங்கே இருக்க மாட்டேன்:
————————————–

“இப்பொழுது உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பணியைக் குறித்துக் கொடுத்துவிட்டேன். அந்தப் பணிக்கு அவரவர் முழுப் பொறுப்பாக இருத்தல் வேண்டும். இவ்வாறு கூறிவிட்டமையின் தத்தம் பணிகள் தவிர அடுத்தவர் அழைத்தால் இது என் பணி இல்லை என்று ஒதுக்கிவிட வேண்டா. ஒன்றுடன் ஒன்று கலந்து பணிகள் செய்யப் பெற்றால்தான் முழுத்தன்மை உடையனவாக இருக்கும். எனவே அவரவர் பணியில் முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்ய வேண்டும்.

இதில் மிக மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. பெரிய விழாவாகலின் கோவிலுக்குள் ஓயாத அபிடேகம், ஆராதனை, அருச்சனை, தூபதீப அலங்காரங்கள் என்பவை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அங்குள்ளவர்கள் அதில் ஈடுபட்ட பாவனையில் உச்சஸ்தாயியில் “ஓம் சக்தி” என்று கத்துவார்கள். அதில் எதையேனும் பார்க்க வேண்டும் என்றோ அல்லது என்னையே தரிசிக்க வேண்டும் என்றோ யாரும் அங்கே செல்லக் கூடாது.

ஒரு விநாடி கூட உங்களுக்கு இட்ட பணியை விட்டுவிட்டுத் தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று ஒருவரும் எக்காரணத்தைக் கொண்டும் செல்லக்கூடாது. ஏன் தெரியுமா? நீங்கள் அங்கே தரிசனம் செய்யச் சென்றால் நான் அங்கே இருக்க மாட்டேன். எவன் ஒருவன் நான் இட்ட பணியைத் தலைமேல் தாங்கி அந்த இடத்திலேயே இருந்துகொண்டு பணியை ஆற்றுகிறானோ அவனிடமே நான் இருப்பேன். எனவே பணி செய்யும் இடத்தில் இருக்கும் என்னை விட்டு விட்டுக் கோவிலுக்குள் சென்று தேடவேண்டா!” இவ்வாறு கூறிய அன்னை சமையல் நடைபெறுவதைக் கவனிக்கிற இருவரையும் நோக்கி மறுபடியும் கூறத்தொடங்கினாள்.

சோற்றுப்பானைக்குள் என்னைக் காணலாம்:
——————————————–

“நீங்கள் இருவரும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். சரக்கு அறையில் இருப்பவன் அதை விட்டு வெளியே வரத்தேவை இல்லை. எந்த நேரத்திலும் எந்தப் பொருள் வேண்டுமென்றாலும் உடனே எடுத்துக் கொடுக்கத் தயாராக இருத்தல் வேண்டும். சமையலைக் கவனிப்பவன் அந்த இடத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. சிறுநீர் கழிக்க வெளியே செல்வது தவிர இருபத்து நான்கு மணி நேரமும் அதே இடத்தில் தான் இருத்தல் வேண்டும்.

கோவிலில் நடக்கும் பூசை, தூபதீபம் முதலியவற்றைக் காணச் செல்ல வேண்டா. அங்கே ஏன் போகப் போகிறாய்? மகனே! என்னைப் பார்க்க வேணும் என்றுதானே மணிச் சத்தம் கேட்டவுடன் ஓடிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாய்? நான் இப்பொழுதே உனக்குக் கூறுகிறேன். மணி அடித்துத் தூபதீபம் காட்டும் அந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன். என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிற நீ, நான் இல்லாத இடத்திற்கு ஏன் ஓட வேண்டும்? நான் எங்கே இருப்பேன் என்று கேட்கிறாயா? 10 படி அரிசி கொதித்துச் சோறாக மாறும் தவலை அடுப்பில் இருக்கிறதல்லவா? 500 பேருடைய வயிற்றைக் குளிரச் செய்யப் போகிற சோறு கொதிக்கின்ற அந்தத் தவலைக்குள் குனிந்து பார்! அதனுள் நான் இருப்பேன்! ஏழைகளின் வயிற்றைக் குளிரச் செய்யும் சோறு கொதிக்கும் தவலையே என் இருப்பிடமாக இருக்கும். உண்மையாகவே என்னைக் காண விரும்பினால் அதனுள் தான் காணலாம். ஆம்! என் ஆணையைச் சிரத்தின் மேல் தாங்கி அதனை நிறைவேற்றுவதில் இம்மியளவும் கவனக்குறைவு இல்லாமல் எவன் நிறைவேற்றுகிறானோ அவனிடம் நான் தங்கியுள்ளேன்.

கடமையைச் செய்வதில் கண்ணுங்கருத்துமாக இருப்பவன் என்னைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டிய தேவை இல்லை. எங்கே அவன் கடமையை நிறைவேற்றுகிறானோ அங்கேயே நான் நான் இருப்பேன்” என்று கூறி முடித்தாள் மருவூரில் குடிகொண்டு ஏழை எளியவர்களின் துயர்துடைக்க முன்னிற்கும் அருள்நிறை அன்னை ஆதிபராசக்தி.

அன்னையின் அருள்வாக்கு.