விந்தையிலும் விந்தையடா!

0
421

விந்தையிலும் விந்தையடா இந்தச் சக்தி!
விளையாட்டாய்ச் செய்கின்ற சித்து எல்லாம்!
சிந்தையிலும் நினையாத விந்தை ஆட்சி
செலுத்தி நிற்கும் ஆலயமாம் மருவத்தூரை,
வந்தனையே தினம்செய்து போற்றி நின்றால்,
வந்திட்ட துன்பமெல்லாம் விலகி நிற்கும்!
சொந்தமுள தாயாக அன்பு காட்டிச்
சொர்க்கமதைக் காட்டுவாள் இந்த அன்னை

தமிழுக்குப் பேறளிக்க வந்த தாயாம்!
தமிழ்வழியே வழிபாட்டை வேண்டும் சத்தி
தமிழ்தாங்கும் கோயிலெனில் மருவத் தூரே!
தமிழ்வளர்ச்சி உண்டென்றால் மருவத் தூரே!
அமிழ்தான் சொல்லெடுத்துக் குறையைப் போக்கி
அருளுட்டி வாழவைக்கும் கருணை யானாள்!
நமக்குள்ள விதியழித்தே நலமே சேர்ப்பாள்
நற்றமிழாள் சேவடியைப் பணிந்தே வாழ்வோம்.

அண்டிவரும் கவலைபயம் விலகிச் செல்லும்
அன்னையினை நினைந்திட்டால் எந்த நாளும்!
எண்ணமெல்லாம் இனித்திடவே என்றும் அன்னை
இருக்கின்றாள் என்பதனால் துன்ப மில்லை!
கண்ணாக நாமெண்ணிப் போற்று கின்றோம்;
கருத்தாக அவனடியைப் பற்று கின்றோம்
எண்ணியவர் றெங்களையே காக்க வேண்டும்;
எதிர்கொள்ளும் தொல்லைகளைப் போக்க வேண்டும்!

பெருமையுடன் உன்புகழை நாங்கள் பாடப்
பெரும்பதியாம் மருவூரில் கோயில் கொண்டாய்!
திருப்பதியாய் இப்பதியை மாற்ற வந்தாய்!
திருவருளைக் காட்டி வினை தீர்க்க நின்றாய்!
அருமையிலும் அருமையம்மா ஆதி சக்தி
ஆடிப்பூரத்தில்நீ உருளுங் காட்சி!
சற்றேனும் கண்டவரும் உண்டோ அம்மா?
சத்தியினை மண்ணுக்குள் வைக்கும் தேவி!

எங்களுளம் போற்றுகின்ற சத்தி யம்மா!
ஈடுண்டோ உன்புகழை ஓத அம்மா!
‘‘பங்காரு” அடிகளைநீ பெற்றெ டுத்தாய்!
பக்தி மனம் பரவிடவே வழிவ குத்தாய்!
தங்குகின்ற புகழ்மணக்கும் தருமத் தாயே!
தரணிக்கோர் ஒளியூட்ட வந்த தேவி!
பொங்குகின்ற அன்பாலே பாடு கின்றேன்!
பூரித்தே உன்னருளை நாடு கின்றேன்.

 

ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 5 (1982)
பக்கம்: 39