நீயோர் அவதார புருஷன்!

0
588

அலை அலையாய் –

அலை அலையாய் – எழும்

ஜல சமுத்திரம் போல்…

தலை தலையாய் –

தலை தலையாய் – ஒரு

ஜன சமுத்திரம் பொங்கி…

அன்றாடம்

அடிமலா் அலம்ப

அமா்ந்து அருள்பாலிக்கும்

ஆன்மிக குருவே!

ஓா் –

ஒப்புரவு இல்லாத –

துப்புரவு எனும்படி –

அப்பழுக் கற்றிருக்கும் –

அறத்தின் உருவே!

எண்ணற்றோர் –

எண்ண வயல்களில் –

அன்புப் பயிர் விளைய –

ஆதாரமான எருவே!

தழல் பரப்பும் – துயரில்

தவிப்பார்க்குத் – தண்ணருள்

நிழல் பரப்பும் –

நெடிய கற்பகத் தருவே!

எவையெலாம் – உயரிய

இறைமைக் குணங்களோ –

அவையெலாம் – ஒருசேர

அமைந்த குணாளா!

அஷ்டலட்சுமியாய் –

அருளொழுகும் இல்லத்தரசி –

இஷ்டலட்சுமியின் –

இனிய மணாளா!

அய்யனே!

துய்யனே!

உன் –

வாரிசுகளாய் விளங்கும்..

அன்பழகன்

செந்தில்குமார்

ஸ்ரீதேவி

உமாதேவி

ஆகிய பிள்ளைகளுக்கு – நீ

அப்பா! அகிலம் வாழ் –

அனைத்துப் பிள்ளைகளுக்கும் –

நீ

அம்மா!

அய்யா! உன்னால் –

அறிந்தேன் இன்று

“ அம்மா ” என்பது

ஆண்பால் என்று!

கருவுா் மதலையென்றாகிக் –

கைகால்கள் முளைத்துப்பின் –

தெருஊா் மானிடா்க்குத் –

திருவருளும் குருவருளும் –

தருஊா் இஃதொன்றே எனத் –

தெரிவிக்க வேண்டியேதான் –

மருவுா் எழுந்தனையோ –

மாணிக்க வாசகனே!

nபாலதன் மேன்மையைப் –

பாலாடை காட்டும்

நற்றமிழ் மேன்மையை –

நுாலாடை காட்டும்

இறையன்பா் மேன்மையை –

எவ்வாடை காட்டும்?

சக்திகள் சூடுகின்ற –

செவ்வாடை காட்டும்!

செவ்வாடை அணிந்தாரைச் –

சிந்தா குலம் என்னும் –

செவ்வாடை அணுவளவும் –

வாட்டாது எனச் சொன்ன…

மாமணியே! மன்னவனே!

மருவத்துார் மகானே! உன்னடி –

நத்துவான் எஞ்ஞான்றும் –

நரகத்துள் புகானே!

செந்நிற வேட்டியும் –

சட்டையும் அணிந்து –

படிமிசை உலாவும் –

பராசக்தியே ! உன்னை –

வழுத்தி –

வந்திப்பார்க்கு –

இமைப்போதில் வந்துசேரும்

இதுகாரும் வராசக்தியே!

உலகுதொழும் –

உத்தமனே!

உன்போ் சொன்னால் –

என்போ் முன்னால் –

ஒட்டிக்கொள்கிறது சக்தி – எனைக்

கட்டிக்கொள்கிறது பக்தி!

உன்னிடம் வாராமல் –

உன்னடி சேராமல் –

இருப்போரை மட்டுமே –

எட்டிச்செல்கிறது முக்தி!

ஓம்சக்தி! என நீ

ஓதுகின்ற…

அந்த அஞ்செழுத்து –

நின்னருளால் ஆனதெங்கள் –

நெஞ்செழுத்து!

அது –

சிதிலமடையாத –

சிலையெழுத்து ஊழி –

நாள்வரினும் அழியாத –

நிலையெழுத்து அய்யா!

உன்னருளால் – அதை

ஓத ஓத –

மாறிப்போகும் – துயா்படும்

மன்பதையின் தலையெழுத்து!

பூசிப்பார் நேசிப்பார் –

பழவினை தீா்க்கும் –

பங்காரு அடிகளே! உன் –

புகழை முழுமையாய்ப் –

புகல வொண்ணுமோ -என்

பாட்டு அடிகளே?

நீ –

சொல்லுக்குள் அடங்காத –

சூட்சுமம் ஒரு –

சமயத்துள் ஒடுங்காத

சாத்திரம்!

நீ பொது உனக்கு

நிகா் எது?

முதல், நடு, ஈறு

மூன்று மில்லாத –

பரப்பிரம்மம் எது?

பங்காரு அடிகள்தான் அது!

நீ –

கைக்கரும் பில்லாத –

காஞ்சி காமாட்சி, கையில் –

மணிக்கிள்ளை ஏந்தாத –

மதுரை மீனாட்சி!

இங்கு நீ –

பங்காரு காமாட்சி! இதற்கு

வான் சாட்சி, வளிசாட்சி

கான்சாட்சி,
கடல்சாட்சி

நான் சாட்சி  -இதற்குமேல்

ஏன் சாட்சி?

ஆம்!

அம்பாள் உன்னை –

அரவணைத்தாள் –

“ நம்பாள் ” என்று – அவள்

“ நம்பாள் ” என்றதால் -உனை

நான் தொழுகிறேன் -நீயந்த

அம்பாள் என்று!

உன்னுள்  இறைவி

ஒளிந்திருக்கிறாள்!

உன்வடிவில் – அவள்

ஒளிர்ந்திருக்கிறாள் – நாங்கள் –

உன்னைத் தொழுதால் – அவள்

தன்னைத் தொழுவதாய் ஏற்று –

தன்

குங்கும வதனம்

குளிர்ந்திருக்கிறாள்!

ஓா் –

ஒச்சமில்லாத பெரியோனே!

உன்னுள் இருக்கும் –

ஒளிதான்…

இங்கு –

இன்று –

என்னை –

இழுத்து வந்தது

உன்னைப்பாட

உட்கார்ந்தேன்

என்முன்னால் இதோ ! இதோ !

என்று

எழுத்து வந்தது!

என்னைத் திருடிய

ஏந்தலே ! உன் –

எளிவந்த தன்மையை –

என்சொல்ல?

நீ –

எல்லோர்போலும் இருக்கிறாய்

எல்லோர்போலும் சிரிக்கிறாய்

எல்லோர்போலும் நடக்கிறாய்

எல்லோர்போலும் கிடக்கிறாய்!

ஆயினும் நீயோர்

அவதார புருஷன்! அன்பால் –

அம்புவி அனைத்தையும் –

ஆளவந்த அரசன்!

நீ –

மக்களின் கண்ணீரைத் துடைக்கும்

மகத்தான கைக்குட்டை

சகலரின் உதிரமும் –

சிவப்பு என்பதை –

உலகுக்குச் சொல்கிறது –

உனது செஞ்சட்டை!

ஊா் ஊராய் –

ஊா்வலம் வரும் –

அரசியல்வாதியல்ல நீ

ஊா் உருப்பட –

ஊா்வலம் வராமல் –

உருள்வலம் வரும் –

ஆன்மிகவாதி நீ

நீ

உருள்வலம் வந்தால் -ஊா்

அருள்நலம் பெறும்

ஊருக்கு –

உற்ற துயரேல்லாம் – ஒரு

நொடியில்

நைந்த கயிறுபோல் அறும்!

சாதிச்சங்கங்கள் உன்னால் –

சக்திச் சங்கங்கள் ஆயின

வார –

வழிபாடெனும் –

வேள்வியில் பேதங்கள்

வெந்து சாம்பலாகிப் போயின!

வேட்பாளா்

ஒருவரை –

எம்பி ஆக்கலாம்

எம்எல்ஏ ஆக்கலாம் –

அவா் வாக்கும்

இவா் வாக்கும்! ஆனால்…

அவா் வாக்கு

இவா் வாக்கு

அவற்றிலும்
மேலானது – உன்

அருள்வாக்கு!

நீ

பத்தொன்பதாம் சித்தா்

அறுபத்து நான்காம் நாயன்மார்!

நீ –

பேசறிய –

பெரிய யோகி! அதனால்தான்

உனைப்

பணிய வருகிறார் –

பால யோகி!

அவா் –

பாராளுமன்றத் தலைவா், நீ

பாருக்கே தலைவன்!

ஆயினும் நீ

அமரிக்கையாக இருக்கிறாய்

அந்த

அமரிக்கையைக் கண்டுதான்

உன்னை

அமெரிக்கா அழைத்தது

உன்னை அது

வணங்கி –

வியட்நாம் யுத்தத்தில்

விளைந்த பாவங்களிலிருந்து

பிழைத்தது!

அமெரிக்கா சென்று – நம்

ஆன்மிகத்தின் சிறப்பை –

எடுத்து ஓதிய –

இரண்டாம் விவேகானந்தனே!

இன்று –

மணிவிழாக்காணும்

மகோன்னதமான விசுவரூபனே!

இங்கு –

எளியேன் போந்தது…

உனக்கு –

வாழ்த்துக்களை வழங்க அல்ல…

உனது

வாழ்த்துக்களை வாங்க!

செவ்வாடை புணைந்த தேசிகனே!

உன் –

சேவடியில் விழுவேன், உன்னைத்

தாயினும் சாலப் பரிந்துதவும் –

தாயெனத் தொழுவேன்

உன் –

போ் எனும் –

ஏர்கொண்டு –

என்நாவை –

எந்நாளும் உழுவேன்

தொல்வினையால் – மெல்லத்

தொய்ந்தாலும் – உனைத் தரிசித்த

நல்வினையால் – மீட்டும்

நிமிர்ந்து எழுவேன்!

வணங்கினேன் உன்னை

வாழ்த்துக என்னை!

 

ஓம்சக்தி!

நன்றி (கவிஞா் வாலி )  (மார்ச் 2001 சக்திஒளி இதழிலிருந்து)

சக்திஒளி -ஆகஸ்ட் 2013

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.